Archive for ஜூலை, 2007
மின்னஞ்சலில் காணாமல் போன தோழி
யாஹூவின் அரட்டை அரங்கத்திற்கு (Chat world) பொதுவாக நுழையமாட்டேன். அன்று ஏனோ அலுவலில் வேலை இல்லையன்பதாலும், பொழுதுபோகவில்லையென்பதாலும், சரி போகலாம் என்று நுழைந்தேன். அதனை தவிர்ப்பதற்கு காரணம், அரட்டைக்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால். ஒருவர் வந்து பேச்சு கொடுத்தார். ஏ.எஸ்.எல் எல்லாம் கேட்ட பிறகு சும்மா கொஞ்ச நேரம் பேசினோம். பெண் என்று தெரிந்தது. பெண் என்று சொல்லியும் பலர் வருவார்கள். பெயர் பிரியா என்றும், சென்னை அடையாறை சேர்ந்தவள் என்றும் கூறினாள். திருமணமாகி சில மாதங்களே ஆகி தற்போது (அப்பொழுது) ஆஸ்திரேலியாவில் இல்லத்தரசியாக இருப்பதாகவும் கூறினாள். அவள் தம்பியும் ஆஸ்திரேலியாவில் தான் படித்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அவன் தனியாக அவன் நண்பனுடன் தங்கியிருப்பதாகவும், எப்பொழுதாவது வந்து பார்ப்பான் என்றும் கூறினாள்.
அந்த நாட்களில், 2004-ல், நான் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். தினமும் இந்திய நேரம் 11 மணியளவில் அரட்டைக்கு வந்துவிடுவாள். 2-3 மணிநேரம் நீளும். இரண்டொரு நாளிலேயே அன்யோன்யமாகி விட்டாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திடீரென்று தன் குடும்ப கஷ்டங்களையெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டாள். தினமும் தன் வீட்டில் நடப்பனவற்றை என்னிடம் ஒப்புவிக்க ஆரம்பித்து விட்டாள். தன் ஹோம் சிக், எந்த அளவு தன் பிறந்த வீட்டை மிஸ் செய்கிறாள் என்று அரட்டை நீளும். சென்னைக்கு வந்தால் வீட்டிற்கு வருமாறு கூறினாள். தனக்கும் தன் கணவருக்கும் இடையில் நடக்கும் சிறு சிறு சண்டைகள், பின் சமாதானம், தனிமையில் அவளுக்கிருக்கும் கஷ்டம், அங்கிருக்கும் இந்திய கணவர்கள் எவ்வாறு இந்தியாவில் இருக்கும் தன் மனைவிமார்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள், வீட்டு வேலை அவளை பாடாய் படுத்துவது என்றெல்லாம் புலம்புவாள். அவளின் சங்கடங்களை நினைத்து 2005-ல் நான் எழுதிய பதிவு இது. எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த ஒரே தொடர்பு யாஹூ மின்னஞ்சல் முகவரி மட்டுமே. அதனை தவிர்த்து வேறெதுவும் கிடையாது.
சில நாட்கள் கழித்து அவள் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவத்துக்கு ஓரிரு வாரத்தில் சென்னை செல்வதாகவும் கூறினாள். அந்த இரு வாரமும் ஊருக்கு போகப்போவதில் அவளுக்கு நிறைய சந்தோஷங்கள். சென்னையில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற கனவுகள் வேறு. ஊருக்கு செல்வதற்கான ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தாள். பின் ஊருக்கு செல்வதில் இருந்த இழுபறியும் அவளை பாதிக்கவே செய்தது. ஒருவழியாக எல்லா இழபறியும் கழிந்து ஊருக்கு செல்லும் நாளும் வந்தது. சென்னைக்கு கிளம்பும் அன்றும் தன் கணவனுடன் ஏதோ மனஸ்தாபம், பின் வழக்கம் போல சமாதானம்.
சென்னைக்கு வந்ததும் மின்னஞ்சல் அனுப்புமாறு பேசிவைத்துக்கொண்டோம். அது தான் நான் அவளிடம் பேசிய (சாட்டிய) கடைசி நாள். சென்னைக்கு வந்தவள் பின் எந்த மின்னஞ்சலும் அவளுடமிருந்து வரவில்லை. சரி! பிஸி போல என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதன் பின்னும் அவளிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. நானும் சில நாட்கள் கழித்து மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால், மவுனமே பதிலானது. பிரச்சினை என்னவென்றால் அவள் என்ன ஆனாள் என்பதுதான். மின்னஞ்சல் முகவரி தவிர்த்து வேறெதுவும் என்னிடம் கிடையாது. நானும் நினைவுக்கு வரும் போதெல்லாம் மின்னஞ்சல் அனுப்புவேன். அவள் மின்னஞ்சல் முகவரியும் / கடவுச்சொல்லும் அவளுக்கு மட்டுமே தெரியுமாதலால் வேறொருவரும் எனக்கு பதில் சொல்ல முடியாது. ஒருவாறு பயம் மட்டுமே மிஞ்சும்…
11 comments ஜூலை 11, 2007