Univercell-ம் அயோக்கிய ஆடித்தள்ளுபடியும்…
நேற்று வேறொருவருக்கு நோக்கியா அலைபேசி வாங்கலாமென்று பான்டி பசாரில் இருக்கும் யூனிவர்செல்-லுக்கு சென்றிருந்தேன். நோக்கியா 3600 வாங்கும் யோசனையில் சென்றிருந்தேன். அங்கு சென்றவுடன் என் நாக்கில் சனி நர்த்தனம் ஆடிற்று. ‘ஆடித்தள்ளுபடி எந்த எந்த மாடலுக்கு’ என்று கேள்வி கேட்டேன். பின் தான் தெரிந்தது அது சும்மா ஒரு விளம்பரத்திற்கு தான் என்று. கடைசியில் வெகு வெகு சொற்பமான, ஓடாத மாடல்களுக்கே ஆடித்தள்ளுபடி என்று. சரி! விடக்கூடாது என்று மொபைல் மாடல்களை காட்டுங்கள் என்ரு கேட்டேன். சில மாடல்கள் சொன்னார்கள்.
எந்த மாடல் ஓடாதோ அந்த மாடல்களுக்கு ஆடித்தள்ளுபடி என்று தள்ளிவிடுகிறார்கள். அதுவும் ஒருவர் ஒரு மாடலை சொன்னால், அது நமக்கு பிடித்து போனால் உடனே இன்னொருவர் ‘இல்லை, இந்த மாடலுக்கு இல்லை’ என்பார். எல்.ஜி.-யில் (நாட் ப்ரம் ம.தி.மு.க) ஒரு மாடல் விலை 20K என்றும் அந்த மாடல் ஆடித்தள்ளுபடியில் 10K என்றும் சொன்னார்கள். சரி அதை காண்பியுங்கள் என்று சொல்ல, அதை எடுத்து வந்தார்கள். அது 5MP கேமரா உள்ள மாடல். மாடலும் ஓ.கே. நோக்கியா 3600-ன் விலை 9600 ரூபாய். சரி! 20K அலைபேசி 10K-க்கு கிடைக்கிறதே என்றும், வழக்கமாக நோக்கியா தான் வாங்குகிறோம், ஒரு சேஞ்சுக்கு மற்ற கம்பேனி வாங்கலாம் என்று ஒரு யோசனை இருந்ததாலும், முக்கியமாக யூனிவர்செல் மேல் நம்பிக்கை இருந்து தொலைத்ததாலும் வேறு எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கி வந்தேன். வாங்கும் நோக்கில் செல்லவில்லை. சும்மா பார்த்து வரலாமே என்று தான் சென்றேன். பின் காற்று வாங்க போன இடத்தில் கழுதை வாங்கி வந்த கதையாக, இதை வாங்கி வந்தேன்.
அவர்கள் சொன்னது இந்த மாடலின் விலை 20K, தள்ளுபடி போக 10K என்று. ஆனால், இன்று அலுவல் வந்ததும் அதன் விலையை அவர்களுடைய வலையில் பார்த்தால் அதன் விலை 10,500+ தான். சரி தள்ளுபடி போக போட்டிருப்பார்களோ என்று பார்த்தால் மற்ற கடைகளிலும் இதே விலை தான் (இதில் இன்னொருத்தர் அந்த மொபைல் விலை 13K என்றும் ஆடித்தள்ளுபடியில் 10K என்றும் உளரினார். அதுவும் தவறு). கோபமுடன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டால், ‘எங்கள் கடையில் விலை 10K தான்’ என்றார்கள். அப்புறம் ஏன் தள்ளுபடி என்று போடுகிறீர்கள் என்றால், MRP விலை 27+ அதை ஒப்பிட்டு பார்த்தால் 5MP கொண்ட இந்த மொபைல் சீப் தானே என்று வியாக்கியானம் பேசினார்கள். அதை நீங்க சொல்லக்கூடாது, நாங்க சொல்லனும், ‘சீப்’பா என்று.
மேலும், அந்த மாடலின் ஒர்ஜினல் விலை 27K. இப்பொழுது தள்ளுபடியில் எல்.ஜி.யே இந்த விலைக்கு கொடுகிறது. அப்புறம் எதற்கு இந்த மொள்ளமாறித்தனம்? கேட்டால் பதில் இல்லை.
இது தான் யூனிவர்செல்-லின் ஆடித்தள்ளுபடியின் லட்சனம்.
மேலும், என் நோக்கியா 6300-ன் டிஸ்ப்லே அவுட். எவ்வளவு ஆகும் என்று விசாரித்தால் வெளியில் 1300 ரூபாய் ஆகும் + ஒரு நாளின் மற்றிவிடலாம் என்று சொன்னார்கள். அதுவும் ஒரிஜினல் டிஸ்ப்ளே. (இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை). அதே யூனிவர்செல்-ல் 2800 ரூபாய் + 7 நாட்கள் ஆகுமாம்.
இனி யூனிவர்செல்-க்கு செல்லவேகூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.
இது இங்கு மட்டும் இல்லை. சென்ற வாரம் சரவணா ஸ்டோருக்கு சென்றிருந்தேன். திரும்பும் இடமெல்லாம் ஆடித்தள்ளுபடி விளம்பரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வழக்கமாக சோப் + அதன் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருந்தால் அதன் மேல் ஒரு தகவல் பலகை இருக்கும். உதா, 1+1 ஆஃப்பர் என்று. அதே போல எல்லா இடங்களிலும் ஆடித்தள்ளுபடி என்று தொங்க விட்டிருந்தார்கள். ‘சரிங்க! இதுக்கு தள்ளுபடி உண்டா’ என்று கேட்க. ‘இல்லை! அதோ அங்கு ஒரு மூளையில் இருக்கே, அந்த ஷெல்ஃபுக்கு மட்டும் தான்’ என்றார்கள்.’ அப்புறம் எதற்கு எல்லா இடங்களிலும் ஆடித்தளுபடின்னு போட்டிருக்கீங்க?’ என்றால் சிரிப்பு தான் பதில்.
ஆக, வாடிக்கையாளர்களே தெய்வம்! வாடிக்கையாளர்களே முட்டாள்களும்.
போங்கடா நீங்களும் உங்க, அயோக்கிய, ஆடித்தள்ளுபடிகளும்.
26 comments ஆகஸ்ட் 11, 2008
இனியொரு உலகு செய்வோம். அதில் அமெரிக்கா இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.
“இந்திய நடுத்தர வர்க்கப் பிரிவினர் சத்தான உணவு உட்கொள்ள ஆரம்பித்திருப்பதுதான் உலக அளவில் உனவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம்” என்று (உலக) அமெரிக்க அதிபர் ‘புஸ்’ திருவாய் மலர்ந்திருக்கார். இதை கேட்டு (அமெரிக்க) இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் தேமேவென்று 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்து கொண்டு, 10 ஜன்பத் சாலையை நோக்கி லுக் விட்டு காத்துகிட்டிருக்கார்.
ஜோக்குகளில் பல வகை உண்டு. அதில் ஒரு வகை சாடிஸ வகை ஜோக்குகள். உதா, “நீங்க தான் மிஸ்டர். ஸ்மித்தின் விதவை மனைவியா?”, “நான் ஸ்மித்தின் மனைவி தான். ஆனால் விதவை இல்லையே!”, “கொஞ்சம் பொருங்கள். இப்பொழுது தான் அவர் உடலை கொண்டு வருகிறோம்”. இந்த வகையான ஜோக்குகளை தான் புஷ் இப்பொழுது உதிர்த்திருக்கிறார்.
புஷ்ஷுக்கு என்ன தான் வேணுமாம்? அமெரிக்கர்கள் குறைந்த செலவில் சோறு சாப்பிட இந்தியர்களும் சீனர்களும் சத்தான உணவை உட்கொள்ளகூடாதுன்னு நெனைக்கிறாரா? சரியான மற கழன்ட கேஸு. இது புஷ் மாத்திரம் அல்ல. மொத்த அமெரிக்கர்களின் திமிரான போக்கையே காட்டுகிறது. அடுத்தவன் எப்படி போனாலும் கவலை இல்லை. ஆனால் தன் சொகுசுக்கு மட்டும் பங்கம் வந்துவிடக்கூடாது. இப்படித்தானே கேத்ரீனா புயலுக்காக அகதிகளாக வந்த அடுத்த மாகான மக்களை உள்ளே விடாமல் தடுத்தனர் டெக்ஸாஸ் மாகான மக்கள்? இது என்ன மாதிரி மனநிலை என்று தெரியவில்லை. இதில் உலகின் போலீஸ்காரன் என்ற கர்வம் வேறு. இப்படிபட்ட அமெரிக்கா இருந்தால் என்ன அழிந்தால் என்ன? அமெரிக்கர்களை பொருத்த வரை அவர்களுடைய உலக வரை படத்தில் வேறு எந்த நாட்டினருக்கும் இடம் இல்லை.
இதில் தலையாட்டி மன்மோகன் சிங் + பசி கூட்டனி வேறு என்ன தான் செய்வார்கள்? ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது. இவர்கள் மேதாவிகளாயிருந்து என்ன பயன்? நாடு அமெரிக்காவின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டது தான் மிச்சம். இப்பொழுதே அமெரிக்காவில் மழை பெய்தால் இவர்கள் தும்முவதை விடவும் நம் பொருளாதரத்தையும் சேர்த்து தும்ம வைத்துவிட்டார்கள். கேட்டால், அமெரிக்காவில் Recession என்பார்கள்.
இன்னைக்கு இப்படி கூப்பாடு போடுறாரே புஸ்ஸு…அதுக்கு முக்கிய காரணம் வளர்ந்த நாடுகளே! இவர்கள் வெளியேற்றும் நச்சுக்காற்று தான் வளி மண்டலத்தை சூடாக்கி புவி வெப்ப மாறுதலுக்கு காரணமே. உலகில் ஆஸ்திரேலியாவின் மேல் இருக்கும் ஓசோன் படலமே அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதையும் விட சீனா இன்று வெளியேற்றும் நச்சுக் காரணிகளே அதிகம். இது அவர்களின் நீராதாரங்களை மெல்ல மெல்ல அழித்து வருகிறது. சீனா நாளையை பற்றி கவலைப்படாமல் இன்று முன்னேறுவதிலேயே குறியாய் இருக்கிறது. அன்னாச்சி அமெரிக்காவும் இதில் சளைத்தவர் இல்லை. முதலில் இந்த வளர்ந்த நாடுகளை ஒழித்துக் கட்டினால் உலகிற்கே நிம்மதி போலும்.
உணவு விஷயத்திலும், அமெரிக்கா போன்ற நாடுகள் எரிபொருள் தயாரிக்க உணவு பொருட்களை உபயோக்கின்றன. மக்காச் சோளத்திலிருந்து எத்தனால் தயாரிக்க கோதுமை பயிரிடவேண்டிய நிலத்தினில் மக்காச்சோளம் பயிரிட ஆரம்பித்தார்கள். இதுவும் கோதுமை அரிசி போன்ற உணவு பொருட்கள் உற்பத்தி குறைய காரணம். எரிபொருள் என்றுமே நன்மை தருவன அல்ல. அது வெளிப்படுத்துவது சூட்டை. இதுவும் புவி வெப்பமடைவதற்கு ஒரு காரணியாகும்.
எதிர்கால மழை குறைபாடுக்கு நம்மை நாம் இப்பொழுதே தயார் படுத்திக்க வேண்டும். அதற்காக உற்பத்தியை பெருக்க் வேண்டும். பாதிக்கப்படுபவர்கள் பசியே அறியாத ‘பசி’ அல்ல. நடுத்தர வர்கத்தினரும் அன்றாடங்காய்ச்சிகளும் தான். போன வருடத்தை விடவும் இந்த வருடம் விளைச்சல் என்னவோ அமோகம் தான். ஆனாலும் இது எதிர்காலத்திற்கு போதுமானதல்ல. வளார்ந்த நாடுகள் விவசாயத்தை நம்பி இல்லை. அடுத்தவன் விளைச்சலை காசு கொடுத்து வாங்குபவர்கள், பின்னாளில் நம்மால் கொடுக்கமுடியாத போது வளர்ந்த நாடுகளுக்கு 2 வழிகள் தாம் உள்ளன.
ஒன்று, அவர்களுக்கு மன்மோகன் இந்திய பிரதமராகவும் பசி நிதியமைச்சராகவும் இருக்கவேண்டும்.
அல்லது, உணவுக்கான உலகப் போர். (பின்ன புஷ்ஷின் பேச்சை பார்த்தால் தன் பசிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்).
இனி அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக இருக்காது போல. அதையும் விட சீக்கிரத்தில் உணவுக்காக போரிட வேண்டும்.
இனியொரு உலகு செய்வோம். அதில் அமெரிக்கா இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.
தொடர்புடைய சுட்டி…
இந்தியர்களைவிட 5 மடங்கு அதிகம்சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள்
3 comments மே 5, 2008
‘பிட்’தகோரஸ் தேற்றங்கள்
ஆய கலைகள் 64-ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா என்ன கேட்டீங்கன்னா கட்டாயம் கூட ஒன்னு சேர்க்கனும்ங்க. ஆக மொத்தம் 65. 63 நாயன்மார்கள் கூட 64-வதா கிருபானந்த வாரியாரை சேர்க்கனும்னு சில பேர் குரல் கொடுத்தாங்க. அப்பவே இந்த 64+1 கலைகள் பத்தியும் பேசலாம்னு தான் இருந்தேன். ஆனா பாருங்க தனியா பேசுனா ஒரு மாதிரியா பாக்குறாய்ங்க. என்ன பன்னுறது? உலகம் அப்படி. உலகம் உருண்டைனு சொன்னதும் கொலம்பஸ்ஸை கூட அடிச்சாங்களாமே. அட! அது கொலம்பஸ் இல்லை தானே. வேற யாரு? அரிஸ்டாட்டில்???
சரி! விஷயத்துக்கு வருவோம். கல்லூரியில் படிக்கும்(?) போது இப்படித்தான் பல தடவை பல விதமா யோச்சிச்சு எப்படி ‘பிட்’ அடிக்கிறதுன்னு ப்ளான் பன்னுவோம். இங்க பிட்-னா படம் இல்ல. Patch update-னு வேனா சொல்லலாம். யோசிக்கிற நேரத்துல படிக்கலாமில்லன்னு நீங்க கேக்குறது புரியுது.
இருந்தாலும் பாருங்க அந்தந்த சிச்சுவேஷன்ல இருந்து பார்த்தாதான் எங்க நெலம புரியும்.
பள்ளிகூடத்துல படிக்கும் போது பிரச்சினை இல்லீங்க. ஒன்னாப்புல இருந்து அஞ்சாவது படிக்கிறது வரை ஒழுங்காவே படிச்சேன். ஆனா, ஆறாங்கிளாஸ்ல இருந்து தான் பிரச்சினையே ஆரம்பம். படிக்கிறதுன்னா என்னன்னே தெரியாத, வகுப்பறையில கவணுக்கனும்கிறதே தெரியாம வளர்ந்தவங்க நாங்க. வாத்தி பாடம் நடத்தும் போது அட்லாஸ் மேப்பை விரிச்சு ஆளுக்கு ஒரு ஊர் பேற சொல்லி அத கண்டுபிடிக்கிற வெளையாட்டு வெளையாடுவோம். ஹிஸ்டரி வாத்தியாருக்கு பயந்து 1 மாசம் ஸ்கூலுக்கு கட் அடிச்சு தண்ணி டாங்க், வித்த காமிக்கிறவன் இப்படியே ஊரையே சுத்தி கடைசியா மாட்டின பரம்பர…கட்டபொம்மு பரம்பர. பரீட்சைன்னு வந்தா மெயின் பேப்பர்கூட அடிஷனல் பேப்பர கட்டுறதுக்காவது வேனுமின்னு கஷ்டப்பட்டு 3வது பக்கத்த தொடற மாதிரி ஆன்ஸர் எழுதுவோம். நூத்துக்கு எப்படியாவது டபுள் டிஜிட்ல மார்க் வாங்க நான் பட்ட கஷ்டம் இருக்கே…உண்மையிலேயே ரொம்ப கஷ்டபட்ட காலகட்டங்க அது. உங்களுக்கு அதெல்லாம் புரியாது?
ஸ்கூல் படிக்கும் போது வெறும் காப்பி மட்டும் தான் அடிச்சோம், அதுவும் லைட்டா. அதுலயும் வயசான அந்த தமிழ் ஆசிரியை வந்துட்டா…ஆஹ்கா…அந்த சப்ஜெக்ட் பாஸ் தான். அதாவது பக்கத்து அல்லது முன் சீட்டுல இருப்பவன் பேப்பற ‘பாத்து’ எழுதுவது மட்டும் தான். ஏன்னா அது தான் மாட்டினா கூட ஆதாரமில்லாததுனால வார்னிங்கோட விட்டுடுவாங்க. அவ்ளோ வெவரம்? மத்த எல்லா தெகிரியமும் கல்லூரி படிக்கும் போது தான்.
அதுவும் பாத்து எழுதுவதுல ரெண்டு வகை. ஒன்னு காண்பிப்பவன் ஒத்துழைப்போடு பார்த்து எழுதுவது. இன்னொன்னு அவனுக்கு தெரியாமலேயே பார்த்து எழுதுவது. முதலாமாவது பரவாயில்லை. ஆனா அவனுக்கு தெரியாம அவன் பேப்பர பாத்து எழுதுவது இருக்கே, சில சமயம் அவன் பாட்டுக்கு அடுத்த பக்கத்துக்கு திருப்பிடுவான். அதனால கனெக்ஷன் விட்டு போயிடும். சரி பின்னால(!) பாத்துக்கலாம்னு கொஞ்சம் இடம் விட்டுடுவோம். சில சமயம் அந்த கேப் கடைசி வரைக்கும் ஃபில் ஆகாமலேயே இருக்கும்.
வெங்கி என்ற மங்கி
10-வது படிக்கும் போது என் நண்பன் வெங்கி இன்னொருத்தன் பேப்பர் வாங்கி, பிள்ளையார் சுழி மொதகொண்டு, எழுதிக்கொண்டிருந்தான். இவன் எழுதி அடுத்தவனுக்கு பாஸ் பன்னி பின் அதை இன்னொருத்தனுக்கு பாஸ் பன்னி இப்படியே பேப்பர் எங்கேயோ போயிடுச்சு. அதுவும் மெயின் பேப்பர், அடிஷனல் கூட இல்லை. கடைசி 10 நிமிஷமே பாக்கி. எல்லோரும் அவசர அவசரமா பேப்பர்களை கட்டி கொண்டிருக்க, பேப்பர் சொந்தகாரனுக்கு மட்டும் கைக்கு இன்னும் பேப்பர் வரவே இல்லை. செம டென்ஷன், திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி. கடைசியில் அங்க இங்க தேடி வேறு எவனோ அவன் தன்னோட பேப்பரோட கட்டிகிட்டான், மார்க் அதிகமாகும்னு நெனச்சானோ என்னவோ? கடைசி நிமிடத்தில் கஷ்டப்பட்டு ‘முடிச்சவிக்கி’ ஆகி அவனை காப்பாத்தினாங்க.
இன்னொரு டீச்சர் இருப்பாரு. அவர் பேரு நியாபகம் இல்லை (பாபு?). வேதியல் வாத்தியார். அவரு மீன் மாதிரி, எப்பவும் தண்ணியிலேயே இருப்பாரு. பசங்களுக்கு மார்க் விஷயத்தில் குறையே வைக்கமாட்டாரு. அவரோட ப்ராக்டிகல் எக்ஸாம் வரும் முதல் நாளில் லேப் சாவியை வாங்கி கொண்டு சில குறிப்பிட்ட பசங்களோட லேப் நோட்ஸை மட்டும் எடுத்து லேப்பின் ஜன்னல் ஓரம் வெச்சுடுவாங்க. அவங்களும் வீட்டுக்கு போகும்போது அந்த நோட்ஸை எடுத்துக் கொண்டு என்ன எழுதனுமோ அத எழுதிட்டு மறுநாள் யாருக்கும் தெரியாம திரும்ப வெச்சிடுவானுங்க. ஒரு நாள், வழக்கம் போல நோட்ஸை வெளியில எடுத்து வைக்க, அதை வீட்டுக்கு செல்லும் போது எடுத்துக் கொள்ளும் நேரத்துக்கு நடுவுல மழை வர, நோட்டுக்கள் நனைஞ்சு போயிடுச்சு. மறுநாள், சிலரோட நோட்டுங்க மட்டும் ‘நிரந்தரமாக’ காணாமல் போய்விட மாட்டினவங்களுக்கு “குற்றம். நடந்தது என்ன?”-ன்னு செம டோஸு…
இதயெல்லாம் விட காலேஜ்ல தான் செம கலாட்டா…
பி.எஸ்.ஸி கணிதம் படிக்கும் போது இயற்பியல் ப்ராக்டிகல் இருக்கும். திருப்பதின்னு ஒரு புரொப்பஸர். சூப்பர் ஆளு. எல்லோரையும் மரியாதையாகத்தான் கூப்பிடுவார். அவர் க்ளாஸ்னாலே ப்ரஷ்ஷாகிடுவோம். “தம்பி குமரன். ஒன்னு கவனிச்சீங்களா? நீங்க பேசினத நான் பாத்துட்டேன். ஆனா, நான் பாத்துட்டேங்கிறத நீங்க பாக்கல” – இப்படித்தான் பேசுவார். இயற்பியல் ப்ராக்டிகலுக்கு பசங்க பிட் தயாரிப்பாங்க. ஸ்பெக்ட்ரோமீட்டர்-னு ஒன்னு இருக்கும். அதன் பயன் ஒளியை உள்வாங்கி அதை ப்ரிஸம் ஊடே பாய்ச்சி அதனை ஏழு நிறங்களாக பிரிச்சு அந்த ஒளிகளின் அளவை குறிக்க வேண்டும். ஒளி சரியாக தெரிய மேலே கருப்பு துணியை போர்த்திகொள்ள வேண்டும். அதை பயன்படுத்தி உள்ளே பிட்டை எடுத்து (அதான் உள்ளே வெளிச்சம் இருக்கிறதே) படித்து எக்ஸாம் பாஸ் பன்னிடுவாங்க. சில சமயம் மாட்டாமல் இருக்க லேப் உள்ளே வந்ததும் அருகில் இருக்கும் ஜன்னலோரம் பிட்டை பொருத்தி(!) பின் அதனை ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் ஜூம் பன்னி படிச்சுக்குவாங்க.
ஸ்பெக்ட்ரோமீட்டர் (படம் போட்டு காட்டுவோம்ல)
பெட்டிச்செய்தி ஒரு முறை மனோகரன்னு ஒரு பையன் கருப்பு துணியை மேலே போர்த்திகொண்டு பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கு சரியா ‘லைன்’ கிடைக்கல. சரின்னு நம்ம திருப்பதிய கூட்டி வந்து பார்க்க சொன்னான். அவர் ஏதோ எடுத்துவர சொல்ல அவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான். இவர் அட்ஜஸ்ட் செய்துகொண்டிருந்தார். இந்த ஆள்மாராட்டம் நம்ம நண்பன் வெங்கிக்கு தெரியல. உள்ளே இருப்பது திருப்பதினு தெரியாம ஒரு கேள்வி கேட்டான் பாருங்க…அவரால பாவம். ஒன்னுமே பேச முடியல. வெளியே வந்து அவனை பரிதாபமாக பார்த்து அப்படியே நகர்ந்துவிட்டார். அவன் கேட்ட கேள்வி சென்சார்ட்…இப்போ நெனச்சாலும் சிரிப்பாகவும் இருக்கும். |
இன்னொரு கொடுமை. சில பாடங்கள்ல ‘சரியான விடையை தேர்ந்தெடு’-ன்னு இருக்கும். அதுல காப்பி அடிக்கிறது ஈசி. ஆனா ரிஸ்க். வெறும் ஆன்ஸர் மட்டுமே சொல்லுவான். 2, 3, 2 அப்படின்னா முதல் கேள்விக்கு விடை 2வது ஆப்ஷன், இரண்டாவது கேள்விக்கு விடை 3வது ஆப்ஷன் மூன்றாவது கேள்விக்கு விடை 2வது ஆப்ஷன்…இப்படி. ஒரு முறை கெமிஸ்டரி பரீட்சையில 25 (1 மார்க்) கேள்வி வந்தது. லைனா சொல்லிகிட்டே வந்தான். நானும் என் பேப்பர்ல பென்சிலான எழுதிகிட்டே வந்தேன். நடுவுல ரெண்டு அடுத்தடுத்த கேள்விக்கும் ஒரே பதில். ஒன்றை விட்டுட்டேன் போல. அதுக்கு பின்னாடி வர்ற எல்லா கேள்வியும் தப்பாகி அந்த பரீசையில, வழக்கம் போல, பெயில் ஆகிட்டேன். இத நான் எனக்கு பின்னால வந்தவனுக்கும் இதே விடை காம்பிச்சு அவனும் பெயில் ஆகிட்டான்.
ரவி…மைக்கேல் ரவி
மைக்கேல் ரவின்னு ஒரு புரொப்பஸர். பசங்க காப்பி அடிக்கிறாங்கன்னு எப்படி தான் கண்டிபிடிக்கறார்னு தெரியாது. ரொம்ப ஸ்ட்ரிக்ட் (ஏன்னா மண்ட பார்ட்டி). எங்கிருந்தாலும் வந்து கரெக்டா கண்டுபிடிப்பாரு. ஒரு தடவ பெரிய ஹால்ல (ஆடிட்டோரியம்) பரீட்சை நடந்துச்சு. இரண்டு லைனுக்கு ஒரு புரப்பஸர். அவரு என் லைன்ல இல்ல. ஆனா பாருங்க எங்கிருந்தோ பார்த்துட்டு கரெக்டா என் லைனுக்கு வந்து என் க்ளாஸ்மேட்டை பிடிச்சார். அவன் பாவம் ஸ்கேல்ல பென்சிலால பார்முலாவ எழுதி அத பாத்து பாத்து அடிச்சிட்டு இருந்தான். எப்படித்தான் கண்டு பிடிச்சாரோ? விடைத்தாள வாங்கிட்டு அனுப்பிச்சிட்டார். பையன் ஒரு மணிநேரம் தான் எழுதியிருப்பான். ஆனா, காப்பி அடிச்சான்னு தெரிஞ்சா போதும், அவன அப்படியே அனுப்பிடுவார். அதான் அவனுக்கு தண்டனை. சண்ட முன்ன பின்ன இருந்தாலும் சவுன்டு ஜாஸ்தியா இருக்கும்.
CA-ன்னு இன்டர்னல் எக்ஸாம் வெப்பாங்க. அதுல 100 மார்க் வாங்கினால் உங்களுக்கு 10 மார்க் கிடைக்கும். 25 மதிப்பெண்களுக்கு 2 பரீச்சை. அதை யாரும் சீரியஸா எடுத்துக்காம இருந்தா அது உங்க பைனல்ல வேலைய காட்டிடும். இன்டர்னல்ல 25-க்கு 0 வாங்கினா, பைனல்ல மீதி 75-க்கு 50 எடுத்தாதான் பாஸ். அந்த பரீட்சை அவரவர் வகுப்பறையிலேயே நடக்கும். எங்கள் புத்தகங்கள் எல்லாம் எங்களுடனே இருக்கும். இது போதாதா? ஒரு CA-ல திடீர்னு அடுத்த ஸ்டெப் என்னன்னு மறந்துடுச்சு. நேரம் வேற இல்ல. சரி ஆபத்துக்கு பாவமில்லைன்னு(!) கீழே இருந்த புத்தகத்தை எடுத்து கேஷுவலா புரட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். கரெக்டா புரப்பஸர் பார்த்துவிட்டார். அவர் பேரு முரளி. என்ன பன்னுறதுன்னே தெரியல. டக்குன்னு புத்தகத்தை அப்படியே கீழே விட்டேன். அவர் என்ன நெனச்சாரோ. ஒன்னும் சொல்லல. ஏன்னா நாங்க முதுகலை பட்டதாரிகள் ஆச்சே! நமக்கே வெட்கமாக இருக்கட்டும்னு விட்டுட்டாரோ என்னவோ?
முதலில் பார்த்து மட்டுமே காப்பி அடித்துக்கொண்டிருந்தேன். பரினாம வளர்ச்சியா முதுகலை கணிதம் படிக்கும் பொழுது தான் பேப்பர் மாத்தி ஆடிச்சா என்னன்னு தோன்னிச்சு. எங்க கூட படிச்ச இரண்டு பொண்ணுங்க சென்னை ஸ்டெல்லா மாரீஸ்ல இருந்து வந்தவங்க. அவங்க தோஸ்த் ஆனாங்க. அவளுங்க சர்வ சாதாரணமா பேப்பர் மாத்தி எழுதுவாளுங்க. ஒரு முறை இப்படித்தான் என் பேப்பர வாங்கி எழுதிகிட்டு இருந்தாங்க. சரின்னு நானும் அவ பேப்பர வாங்கி எழுதிக்கிட்டிருந்தேன். வாங்கி எழுதிட்டு பேப்பர திருப்பி கொடுக்கும் வரை கை நடுங்கிகிட்டே இருந்துச்சு. அதுக்கு அப்புறம் பேப்பர மாத்தி எழுதறதே இல்ல. ஆனா அவளுங்க கவலையே படமாட்டாளுங்க. இப்போ அதுல ஒருத்தி, கடலோற கவிதைகள் ரேகா மாதிரி, ஒரு டீச்சர்!!!
அப்புறம் எம்.சி.ஏ சேர்ந்த பிறகு கொஞ்சம் நல்ல பிள்ளையா திருந்தியிருந்தேன் (வேற வழி?). இங்கு நடந்த கூத்துக்கள் தான் அதிகம்.
கால்குலேட்டர் ‘தப்பு’ கணக்கு
பெரும்பாலும் ப்ராக்டிகல் எக்ஸாமின் போது தான் அதிகமா பிட் அடிப்போம். அப்போ ஒருத்தன் புத்திசாலித்தனமா (நெனச்சு) ஒரு வேளை பன்னினான். எங்ககிட்ட கருப்பு கலர்ல ஒரு சயின்டிஃபிக் கால்குலேட்டர் இருக்கும். அதுக்கு மேல (அதே கருப்பு) கலர் பென்சிலால எழுதினா பாக்குறவங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சு பென்சிலால கஷ்டமான ஒரு ப்ரோக்ராம எழுதிகிட்டான். அவன் நல்ல நேரம் கால்குலேட்டர்ல எழுதின அதே ப்ரோக்ராம் ப்ராக்டிகல் எக்ஸாம்ல வந்தது. ஆனா அவன் கெட்ட நேரம் பாருங்க, எல்லாம் முடிக்கிற சமயம் கடைசியில மாட்டிகிட்டான். பென்சிலால எழுதினதுனால அத பக்கவாட்டுல சாய்ச்சுவெச்சு ட்யூப்லைட் வெளிச்சத்துல பார்த்தா எழுதியிருக்குறது தெரியும். அதன் படி பரீட்சையில எழுதிட்டான். கடைசி நேரத்துல பிரின்ட் அவுட் எடுக்கும் போது பிரின்டர் பக்கத்துல அந்த கால்குலேட்டர வெச்சிட்டு பிரின்ட் அவுட் எடுத்திருக்கான். அப்போ அந்த பக்கம் போன மைக்கேல் ரவி பார்த்துட்டார். அவருக்கு பளிச்ன்னு முழு ப்ரோக்ராமும் தெரியுது. அவர் பாட்டுக்கு எடுத்து ‘இந்த கால்குலேட்டர் யாருது?’-னு கேட்க, தொலச்சத தேடித்தான் தர்றார்னு நெனச்சு (‘மூன தொட்டது ஆம்ஸ்ட்ராங்னோவ்’ மாதிரி) ‘சார்! நம்ம சூசையோடது’-னு சொல்ல, எல்லோர் எதிரிலேயும் மானத்த வாங்கிட்டார். “You have really escaped from me…Sir”-னு எக்ஸ்டெர்னல் எதிரிலேயே கேட்டுட்டார். பின் அவனுக்கு எந்த தண்டனையும் கொடுக்கல. ஏன்னா அவர் பாலிஸி, தப்பு செய்யும் போது மாட்டினா தான் கொடுப்பாரோ என்னவோ?
‘பிட்’தகோரஸ் தேற்றம்
அப்புறம் இன்னொறு பரீட்சையில். மொத்தம் 13 ப்ரோக்ராம்கள். பாடம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று நினைவு. அதுல பெரும்பாலும் கஷ்டமானது. இருந்தாலும் எல்லாவற்றையும் முடிஞ்ச அளவு புரிஞ்சு படிச்சிருந்தேன். இருந்தாலும் ஒரே ஒரு ப்ரோக்ராம் மட்டும் உதைச்சுது. என்னதான் நம்பிக்கை இருந்தாலும் ஒரு வேளை மறந்துடுச்சுன்னா என்ன பன்னுறதுன்னு அந்த ஒரு ப்ரோக்ராம மட்டும் சின்னதா பிட் எழுதி பரீட்சை ஹாலுக்கு கொண்டு போயிட்டேன். நாம தான் என்னைக்கும் உஷாரில்ல. உள்ளார போனதும் அந்த பிட்ட எடுத்து அங்கிருந்த ஒரு டெஸ்க்கில் ஒளித்து வெச்சுட்டேன். என் கஷ்ட காலம் அந்த ப்ரோக்ராமே எனக்கு வந்தது. எனக்கு நல்லா நியாபகம் இருந்தாலும் கையில் பிட் இருந்ததாலேயே மறந்து போய்விட்ட ஒரு உணர்வு. சரி! ஆனது ஆயிப்போச்சு, அஞ்சு நிமிஷம்னு நெனச்சு பிட்ட பாத்து படம் போட்டு, வழக்கம் போல கை நடுக்கத்துடன், எழுதியாச்சு. அப்போ பார்த்து சூப்பர்வைசர் (அவர் பேரு நியாபகம் இல்லை. நாங்க வெச்ச பேரு ‘படையப்பா’) வந்து ஒவ்வொரு பேப்பரா எடுத்து நம்பர சரி பார்த்துக்கிட்டிருந்தார். என் நேரம் அவர் என் அருகில் இருந்தவனிடம் இருந்து ஆரம்பித்தார். நான் வேற என்ன செய்றதுன்னு தெரியாம அந்த பிட்ட எடுத்து ஆன்சர் பேப்பரின் இரண்டாவது பக்கத்திலேயே வெச்சிருந்தேன். அந்த நேரத்துல வெளிய எடுக்கவும் முடியாது. அவ்வளவு தான். அடுத்து நான் தான். வந்து என் பேப்பர கையில் எடுத்தார். அவர் பேப்பரின் நுனியிலேயே பிடித்து எடுத்ததினால் நடுவில் வைக்கப்பட்ட பிட் விழுந்து விடும் அபாயம் நிறைய இருந்தது. அந்த பயம் வேறு. மாட்டினால் போட்டு கொடுக்கமாட்டார். ஆனா, பையன் நல்லா படிக்கிறவன்ற எண்ணம் இருக்கு. தெரிஞ்சா அந்த நெனப்பு காலியாயிடும். அவர் என் பேப்பர எடுத்த நேரம் வேறு எங்கோ அவர கூப்பிட அவர் அந்த பக்கம் திரும்பினார். நானும் பிட் கீழே விழுந்தால் அதை காட்ச் பிடிக்கவெல்லாம் நினைத்திருந்தேன். நல்ல வேளையாக பிட்டும் கீழே விழவில்லை. அவரும் நம்பர் செக் பன்னி அந்த பக்கம் நகர்ந்துட்டார்.
X 8086 – இது 16 ‘பிட்’ மைக்ரோப்ராஸஸர்?
முன் குறிப்பு
இது ஆதிகால கம்ப்யூட்டரில் ஒரு வகை. இங்கே ப்ரோக்ராம் என்பது எண்களால் ஆனது. அதுவும் நாம் பேச்சுவாக்கில் உபயோகிக்கும் தசம எண்கள் அல்ல. பதின்அறும எண்கள் (Hexa decimal). உதா, 76 என்னும் பதின்அறும எண் ‘Halt’ என்பதை குறிக்கும். ப்ரோக்ராம் முடிக்கவைக்கும் எண் அது. இவற்றை மைக்ரோப்ராஸஸரின் மெமரியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்போம். எங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட மெமரி ஆரம்ப எண் 2000. அதனால் 2000-ல் ஆரம்பித்து 2002, 2004…இப்படி எண்களை டை அடித்துக் கொண்டு போய் கடைசியில் ஏதாவது ஒரு இடத்தில் கடைசியாக ‘76′ என்று முடியும். இதுல ஒரு விஷேசம் என்னன்னா இவை பவர் கட்டானாலோ, ஆஃப் ஆனாலோ, அதில் பதிவு செய்யப்பட்ட ப்ரோக்ராம்கள் அழிந்து விடும் (Volatile Memory).
ஆனா இவை போங்கு அடிச்சது. கரன்ட் கட் ஆனாலும் அதே நம்பருங்க தான் தெரிஞ்சுச்சு. அதை வெச்சே கொஞ்ச நாள் நாங்களும் போங்கடிச்சோம்…இருந்தாலும் அதையும் எங்க ப்ரொப்பஸர் கண்டுபிடிச்சி, ப்ராக்டிகல் ஆரம்பிக்கிற 5 நிமிஷத்துக்கு முன்னாடி வந்து (மேலே சொன்ன) 2000-ல் இருந்து பதிவு செஞ்ச நம்பர்கள அழிப்பார். இவரே இப்படின்னா, நாங்க யாரு? அழிக்கிறவரு 2000-ல இருந்து தான் அழிப்பாரு. நாங்க ஹால்ல இருந்து வெளிய போற 10 நிமிஷத்துக்கு முன்னாடி ப்ரோக்ராம அப்படியே 4000-ல் இருந்து ஆரம்பிச்சு அடிச்சிட்டு போய்டுவோம். முன்னாடியே பேசி வெச்சிடுவோம். அதனால அடுத்து வர்றவன் மொத வேலையா 4000-ல இருந்து 76 வர்ற வரைக்கும் எல்லாத்தையும் எழுதி வெச்சி வந்துடுவான். இப்படியே ‘தகவல் அறியும் சட்டம்’ மூலமா எங்க பொழப்பு ஓடிச்சு.
வாத்திக்கே பாடம் சொன்ன சீனு
ஒரு முறை CA பரீட்சையில் எனக்கு முன் சீட்டிலிருந்தவன் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து எழுதி கொண்டிருந்தான். நான் கேசுவலா பேப்பர பப்பரப்பான்னு பரப்பி வெச்சு எழுதிக்கிட்டிருந்தேன். அப்போ சூப்பர்வைசர் ரஃப்பேல்னு ஒரு புரொப்பஸர். அங்கே நாங்க ரெண்டு பேரும் இருந்த சூழ்நிலைல அவன் என் பேப்பர பாத்து எழுதிக்கிட்டிருந்த மாதிரி இருந்தது. யாரா இருந்தாலும் அப்படித்தான் தோனும். சட்டுனு என் பேப்பர எடுத்து அதுல மேல 5 மார்க் மைனஸுன்னு போட்டுட்டார். அதனால பைனல் எக்ஸாம்ல எனக்கு 100-கு .5 மார்க் அவுட். இது என்னடா வம்பாபோச்சுன்னு அவர் கிட்ட வாதாடி பார்த்தோம். அவர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார். ‘நீ காண்பிச்சேன்னு ஒத்துக்கோ. 5 மார்க் கொடுத்துடறேன்’-ன்னார். நாம தான் சொரணை உள்ளவங்க ஆச்சே. காஃப்பி அடிக்கும் போதோ, இல்ல காண்பிக்கும் போதோ மாட்டியிருந்தா பரவாயில்ல. செவனேன்னு உக்கார்ந்திருந்த நம்மள பார்த்து இப்படி சொல்லிட்டாரேன்னு கடைசி வரைக்கும் ஒத்துக்கலையே. 5 மார்க் போயாச்சு. நாங்கள்ளாம் கௌரவம் படத்துல வர்ற பாரிஸ்டர் ரஜினிகாந்த் மாதிரி. அக்காங்.
இதுக்கே இப்படீன்னா…வாத்திங்க அடிச்ச பிட்கள்…
என் நண்பன் வெங்கி காலேஜ்ல இப்படித்தான் அவன் பக்கத்துல உக்காந்த பொண்ணு ஒன்னு பைனல் ப்ராக்டிக்கல்ல ஒன்னுமே பன்னாம உக்காந்திருந்துச்சு. இவன் என்னடா இது சும்மா உக்காந்திருக்குதேன்னு அவன் மானிட்டர அவ பக்கம் திருப்பி வெச்சு ‘பார்த்து டைப் அடிச்சுக்கும்மா?’ன்னு விட்டான். ஆனா, அவ அதையும் செய்யல. சரின்னு விட்டுட்டான். கடைசி 10 நிமிஷம் இருக்கும் போது அவரவர் செஞ்சு எடுத்த ரிசல்ட்ட பிரின்ட் அவுட் எடுத்து ஆன்ஸர் பேப்பர்ரோட கட்டனும். இவன் பிரின்ட் அவுட் எடுக்க பிரின்டர் பக்கத்துல இருந்த ப்ரொப்பஸர் ஒருத்தர் இவனோட பிரின்ட் அவுட்ட எடுத்து நேரே அந்த பொண்ணுகிட்ட கொடுத்து இவன்கிட்ட ‘வேற எடுத்துக்க’-னு சைகையிலேயே சொன்னார், அந்த பிரின்ட் அவுட்ல அந்த பையனோட ரிஜிஸ்ரேஷன் நம்பர் இருக்குறது கூட தெரியாம. ‘சார்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதுல என் ரிஜிஸ்டர் நம்பரையும் சேத்த்த்த்த்த்த்த்த்த்து தான் பிரின்ட் கொடுத்திருக்கேன்’-னு லொள்ளு சபா மனோகர் ஸ்டைல்ல சொல்லி, அப்புறம் அவன் ரிஜிஸ்ட்டர் நம்பர எடுத்துட்டு அந்த பொண்ணோட ரிஜிஸ்ரேஷன் நம்பர் போட்டு இன்னொரு பிரின்ட் அவுட் எடுத்து கொடுத்தான். அந்த பொண்ணு அந்த பிரின்ட் அவுட்ட எடுத்து அவ பேப்பர்ல கட்டி கொடுத்து நல்ல மார்க் வாங்கிடுச்சு.
இதுதாங்க Master Bit
இதுவும் அதே காலேஜ்ல தான். அக்கவுன்ட்ஸ் பேப்பர் செம்ம கஷ்டமா வந்துச்சு. எல்லோரும் பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தாங்க. அப்போ பிரின்ஸிபால் உள்ளார வந்தார். அவர் வந்ததும் அங்கிருந்த சூப்பர்வைசர் கொஞ்ச நேரம் வெளியே போனார். அவர் எப்பவாவது வந்து ஒரு அரை மணிநேரம் சூப்பர்வைசரா இருப்பார். வந்து பேப்பர் எப்படி இருக்குன்னு விசாரிச்சார். 10 நிமிஷம் கழிச்சு அக்கவுன்ட்ஸ் டிப்பார்ட்மென்ட் எச்.ஓ.டி வந்தார். ‘எல்லோரும் எழுதிக்குங்க’ அப்படீன்னு இரண்டு 10 மார்க் கேள்விக்கு பதில வாசிச்சார். ஆஹா இதென்ன அற்புதம் அப்படீன்னு நெனச்சு பசங்க (புள்ளைங்க எல்லாம் சேர்த்து) புளங்காகிதம் அடஞ்சுட்டாங்க. ஆனா பாருங்க, அந்த 2 விடைகள்ல ஒன்னுல சின்ன கூட்டல் / கழித்தல் தப்போட தான் வாசிச்சார். பசங்க தெளிவா இருந்தாங்கன்னா அதையும் கரெக்ட் செஞ்சு 10-க்கு 10 வாங்கலாம். நிறைய பேர் அத நோட் பன்னல. அப்புறம் நாங்களே குசு குசுன்னு பேசி சரி செஞ்சுட்டோம். அப்ப கூட அந்த சம்ஜெக்ட்ல 30% பேர் தான் பாஸ் அவுட். அவ்வளவு கஷ்டம் அந்த பேப்பர்.
இது எப்படி இருக்கு?
Add comment April 22, 2008
பகுதி 2 :: தொட்டால் பூ மலரும் – சைக்கான்கள்
போ……….ன பதிவில் உடலின் இயக்கங்களுக்கு பக்’கா’ பலமாக இருக்கும் நியூரான்களை பற்றி பார்த்தோம். இப்போ சைக்கான்கள். சைக்கான்கள் பற்றி பொதுவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அதனால் தான் இந்த தாமதம்.
உங்களை யாராவது தொட்டால் உங்கள் மூளைக்கு, இருப்பை பொருத்து, ‘உன்னை யாரோ தொடுறாங்க’ என்று மூளைக்கு சிறு சிறு மின்சார அதிர்வுகள் மூலம் சமிக்சை கொடுப்பது இந்த நியூரான்களின் வேலை.
உடம்புக்கு நியூரான்கள். சரி! மனதுக்கு? இருக்கவே இருக்கிறது, இளிச்சவாய ‘சைக்கான்’கள், கண்ணுக்கு புலப்படாத சைக்கான்கள். சைக்கான்கள் என்பவை “Mental units”.
பொதுவான ஒரு விளக்கம், உதா, நாம் ஒரு கைவிளக்கை (டார்ச்)ஐ உபயோக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதிலிருந்து ஒளிக்கற்றை வெளியேரும். ஆனால் அந்த கைவிளக்கில் ஒளி இல்லை. துப்பாக்கியின் விசையை அழுத்தும் பொழுது, அந்த துப்பாக்கியில் இருந்து குண்டு வெளிவருகிறது. ஆனால், அது போல அல்ல கைவிளக்கில். ஒளிக்கற்றை அந்த கைவிளக்கில் “இருக்கு. ஆனா இல்லை”, “வரும். ஆனா வராது” போலத்தான். Potential என்று சொல்லப்படுவதை போல. இதைப்போன்ற கண்ணால் கான முடியாத “Mental units” தான் சைக்கான்கள்.
இந்த சைக்கான்கள், முன்பே பார்த்த நியூரான்களின் டென்ட்ரைட்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது, ஒவ்வொறு டென்ட்ரைட்களும் ஒவ்வொரு சைக்கான்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். உடம்பின் உணர்ச்சி பகுதிகள் நியூரான்களால் ஆனது போல மனதின் அல்லது ஆன்மாவின் அணுக்கள் தாம் சைக்கான்கள். அதாவது, சைக்கான்கள் ஒன்று சேர்ந்து ஆன்மாவை உருவாக்குகின்றன. இவைகள் அடிப்படை அணுக்கள். அடிப்படை என்றால்? நாமெல்லாம் (நன் ஆன்மாக்கள்) சில பில்லியன் வருடங்களுக்கு முந்தைய சைக்கான்கள். அணுக்கள், செல்கள், நியூரான்கள், விலங்குகள், குரங்குகள் மற்றும் நம் மூதாதையர்கள் ஆகியோறின் செயல்பாடுகளுக்கு இந்த (நம்முடைய) சைக்கான்களே காரணம்! இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள ஆன்மாக்களே இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த அளவு: 700 கோடி-க்கும் குறைவாக!!
சைக்கான்களின் பொதுவான குணங்கள்:
சைக்கான்களுக்கு மரணம் இல்லை. நாம் இறந்தவுடன் நம்முடைய நினைவுகள் எங்கும் போவதில்லை. ஒரு மனிதன் பிறப்பதற்கு ஒரு ஆன்மா தேவை. அந்த ஆன்மாவானது மறு அவதாரம் மூலமாக பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும். சைக்கான்கள் தங்கள் பரிணாம வளர்ச்சியின் பொழுது தங்கள் பொதுவான அடையாளத்தை தொலைக்காது. இது சைக்கான்களின் குணம். இறப்பு என்பது பிறப்பிற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் மிகத் தேவையானதாக இருக்கின்றது.
நமக்கு, நம் மூளைக்கு தெரிந்த செய்திகள் கணக்கிலடங்கா. நினைத்து பாருங்கள். பலவருடங்களுக்கு முன் நிகழ்ந்தவற்றையெல்லாம் நம் மூளை நியாபகம் வைத்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன் பார்த்த நண்பனை மறுபடியும் பார்த்தால் உடனே பழைய நியாபகங்கள் நம்மையும் அறியாமல் நம் மூளை தன்னுடைய hard disk-ல் இருந்து எடுத்து வருகிறது. உடனே நம் மனதில் பலப்பல எண்ணங்கள் ஓடுகிறது. அவனால் பெற்ற நன்மைகள், அவனுடன் ஏற்பட்ட சண்டைகள், சமாதானங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், இப்படி பலப்பல. இவையாவும் ஒலியை விட, மின்னலை விட, ஒளியை விட அதிக வேகத்தில் நமக்கு கிடைக்கிறது, சட்டென்று. இவை யாவற்றையும் எங்கு சேமித்து வைக்கிறது? எவ்வாறு சேமித்து வைக்கிறது? எப்படி அவை நியாபகத்திற்கு கொண்டு வரப்படுகிறது? அவ்வளவும் சுமார் 1.3 – 1.4 கிலோ எடையுள்ள திசுக்களால் ஆன ‘மூளை’ என்னும் பெயருடன் அழைக்கப்படும் ஒரு பொருளில்! (இவையெல்லாம் ஏன் மூளையில் சேமிப்பதாக சொல்லுகிறோம். காரணம், இவையெல்லாம் நம் மரபணுவில் அல்ல என்று சொல்லத்தான். மரபணுக்களால் கொஞ்சம் போல, ஆனால் சக்தி வாய்ந்த, தகவல்கள் சேமிக்கப்படுகின்றன, கணினியின் BIOS battery போல.).
ஆன்மாவிற்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது. உதா, நாம் ஏதாவது ஒரு புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் நம் மூளையின் சில பகுதி துடிப்புடன் இருக்கும். இந்த இடங்களிளெல்லாம் நம் ஆன்மா துடிப்புடன் இருக்கிறதாக அர்த்தம். அதை போலவே நம் மற்ற உடல் சார்ந்த இயக்கங்களும். இவைகளை தற்போது உள்ள விஞ்ஞான சாதனங்களின் உதவியுடனேயே அறிந்துகொள்ளலாம். நாம் மனதில் நினைக்கும் எண்ணங்கள் உடல் சார்ந்த, உணரக்கூடிய சக்தியை கொடுக்கும் என்பது தெரிகிறது. எண்ணங்களுக்கும் உடல் ரீதியான சக்தி உண்டு.
ஆக, நம் ஆன்மா என்னும் மனம் சம்பந்தப்பட்டவையும், மின் அதிர்வுகள் என்னும் உடல் அல்லது உணர்ச்சி சார்ந்தவையும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளவை.
அடுத்து, ஆன்மாவும் சைக்கானும் ஒன்றை ஒன்று ஒத்துப்போகக்கூடியவை. இம்மானுவேல் கன்ட் என்னும் ஜெர்மானிய தத்துவ மேதையின் கூற்றுப்படி, சைக்கன்கள் என்னும் mental unit-கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் துடிப்புடன் இருக்கும். எப்படி?
இப்படி. இந்த பிரபஞ்சத்தின் வெற்றிடங்களில், இன்ன பிற துகள்களின் நடவடிக்கைகள் ஆன்மாக்களின் நடவடிக்கைகளுடன் ஒத்துப் போகவேண்டும் என்ற கட்டாயம் தேவை இல்லை. மற்ற துகள்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். கண்ணால் காணக்கூடிய எந்த பொருளும். தூசு அல்லது எரி கற்களோ அல்லது கோள் போன்றவை. மற்ற துகள்களின் நடவடிக்கைகள் போலவே ஆன்மாக்களின் துகள்களும், நம் சைக்கான்கள், இருக்காது அல்லது நடக்காது. காரணம், மற்ற துகள்களைப் போலவே ஆன்மாக்களையும் நடவடிக்கைகளால் அதன் இருப்பிடத்தை அறியலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. முன்பே சொன்னது போல நடவடிக்கை அற்ற ஆன்மாகளின் இருப்பிடத்தை அறிய முடியாது அல்லவா?
ஆன்மாக்கள் சைக்கான் என்னும் அணுக்களால் ஆனவை. ஆன்மாக்களில் தான் புத்திக்கூர்மை இருக்கின்றது, மூளையில் அல்ல. புத்திக்கூர்மை அடைய முக்கிய காரணம், ஒரு உயிரினத்தின் கைகள். ஆமாம். கைகள் சுதந்திரமானால் தான் யோசிக்க முடியும். நாம் பிறந்த பின் நாம் நம் மனதுக்குள் கேள்விகள் எழும் தருனம் எது என்றால் நாம் நம் கைகளை உபயோகிக்க ஆரம்பித்த பின் தான். கவனித்துப் பாருங்கள். குழந்தை தவழ்ந்து சென்று அமர்ந்து தன் கைகளில் உள்ள தூசுக்களை பார்க்கும். அது தன் கைகளின் உபயோகத்தை பயன்படுத்திக்கொள்ள / புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறது. மீன்களில் டால்பின்களைவிட எட்டு கைகள் கொண்ட ஆக்டோபஸ் மீன்கள் தாம் புத்திக்கூர்மை அதிகம் உடையவை!
மூளை சம்பந்தப்பட்ட விபத்துக்களின் நினைவுகளை இழந்தவர்கள் தனக்கு தெரியாதவற்றை கற்றுக்கொள்வதை விட, கூடிய சீக்கிரம் தாங்கள் மறந்தவற்றை கற்றுக்கொள்கிறார்கள். அதை போலவே, நாம் நம் முற்பிறவியின் நினைவுகளை நாம் சட்டென்று கற்றுக்கொள்ளலாம் (முற்பிறவி/மறுபிறவி இருப்பதாக வைத்துக்கொண்டால், இந்த சைக்கான் தத்துவம் படி).
ஆன்மாக்களை இயற்பியல் சொல்லும் சக்தி (எனர்ஜி)யுடம் ஒப்பிடலாம். எனர்ஜி என்பதை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. ஆனால் அதனை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மற்றலாம், ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு உருமாற்றம் செய்யலாம், கூடு விட்டு கூடு பாய்வது மாதிரி. உதா, ஒரு யந்திரம் (மோட்டார்) சுற்றுவதாக வைத்துக் கொள்ளலாம். யந்திரம் சுற்ற சுற்ற அதில் இருந்து வெப்பம் வெளிப்படுகிறது. இங்கு இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று யந்திரம் என்னும் சக்தி, மற்றொன்று வெப்பம் என்னும் சக்தி. ஒன்றில் இருந்து மற்றொன்று உருவாகின்றது. இரண்டும் இந்த பிரபஞ்சத்தில் தான் இருந்தது. ஒன்று கரைய கரைய மற்றொன்று உருவாகின்றது. அதே போல ஆன்மாக்களுக்கும் அழிவில்லை. அவை இந்த பிரபஞ்சத்தில் தாம் இருக்கும். எங்கும் ஓடிவிடாது.
மற்றொரு சுவையான தகவல். ஒரு வகையில், இந்த உலகில் நாமெல்லாம் மேட்ரிக்ஸ் படத்தில் சொல்லப்படும் பேட்டரி போலத்தான். இந்த உலகின் மக்கள் தொகை ஒரு சம நிலையில் தான் இருக்குமாம். அதாவது இந்த உலகம் இயங்கக்கூடிய அளவில். மக்கள் தொகை அதிகமாக அதிகமாக ஏதாவது ஒரு பேரழிவோ அல்லது ஏதாவது ஒரு வகையில் (உதா, ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகமாவது) போன்ற வழிகளில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படுவது உண்டு. அதேபோல, திடீரென்று மக்கள் தொகை கணிசமாக குறையும் பொழுது அதனை சமம் செய்ய மற்ற வழிகளில் மக்கள் தொகை அதிகரிக்க செய்யப்படும். உதா, இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் உலகில் மக்கள் தொகை அதிகரித்ததை சொல்லலாம். இதற்கு காரணம், போரினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து வெளிவர என்று கூட குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் வாதிடலாம். மேலும் 9/11 தாக்குதலுக்கு பிறகு சரியாக பத்து மாதங்கள் கழித்து அமெரிக்காவில் பிரசவங்கள் வழக்கதை விட அதிகமாக நடந்ததையும் குறிப்பிடுகிறார்கள். இதெல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுவதை போலத்தான்.
மனிதர்களுக்கு மட்டும் தான் இது பொதுவானதா என்றால் மனிதனே ஒரு social animal தானே! அதலால் மிருகங்களுக்கும் இது பொருந்தும் தானே! அமெரிக்காவில் இயந்திரங்களில் பயன்பாடு அதிகரித்த காரணத்தினால், காட்டுக் குதிரைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது, கடந்த 10 – 20 வருடங்களாக. காரணம், காட்டுக் குதிரைகள் பழக்கப்பட்டு வீட்டுக் குதிரைகளாக உபயோகப்படுத்தப்பட்டன. இயந்திரங்களின் வரவால் அவைகளின் பயன்பாடு குறைந்தது.
இவற்றில் இருந்து என்ன தெரிகிறது? நியூரான்கள், சைக்கான்கள், மூளை, ஆன்மா ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது.
மனம் சம்பந்தப்பட்டது தான் சைக்கான்கள். சரி! அப்படியென்றால் ஆன்மாவிற்கும் சைக்கானுக்கும் என்ன சம்பந்தம்?
பின் குறிப்பு: மறுமொழி மட்டுறுத்தலின் சோதனைக்காக இது ஒரு மீள்பதிவு.
Add comment April 15, 2008
யுவனின் காஃபி பேஸ்ட்
யுவன் என்னோட ஃபேவரைட் இசையமைப்பாளர். ஆனாலும், அவர் சுடுறத ஒரு தனி திறமையாவே வெச்சுகிட்டிருக்கார். பயபுள்ள பயங்கர கில்லாடி (கற்பூர நாயகியே?). நந்தா வந்த புதுசில், இளையராஜா ஒரு தடவை யுவனிடம், ‘முன் பனியா’ படலை குறிப்பிட்டு, “இந்த பாட்டு என்னோட ஏதோ ஒரு பாட்டு. அது என்னான்னு சட்டுனு நினைவுக்கு வரலை. சொல்லிடுடா”-ன்னு கேட்டிருக்கார். ஆனா, அந்த பாட்டு அஃமார்க் ஏ.ஆர்.ஆரின் “பூங்காற்றிலே” பாடல். இரண்டும் அப்படியே ஒன்றிப் போகும். “கண்ணில் ஒரு வலியிருந்தால்…” சீக்குவென்ஸ் கூட அப்படியே “மனசில் எதையோ மறைக்கவும்…”-ன்னு போகும்.
தேவாவுக்கும் யுவனுக்கும் (அல்லது இளையராஜாவுக்கும்) பெரிய வித்தியாசமே மற்றவர் கவனிக்காமல் சுடுறது தான்…தேவா அப்படியே ஜெராக்ஸ். எக்ஸாமில் பிள்ளையார் சுழியையும் சேர்த்து காஃபி அடிப்பவர் போல. பழைய படங்களில் ‘வேதா’ன்னு ஒருத்தர் இருந்தார். அவர் அப்படியே இந்தியில இருந்து சுடுவார், வல்லவன் ஒருவன் படத்தில் வரும் “மனம் என்னும் மேடையின் மேலே”, “இன்னும் பார்த்துகொண்டிருந்தால் என்னாவது?” என்று. தேவாவும் வேதாவும் ஒன்னு (என்ன ஒரு பேர் பொருத்தம் பாருங்க).
ஆனா, யுவன் அவர் அப்பாவை போலவே பயங்கர கில்லாடிங்க. சுட்டாலும் தெரியாம சுடுறது. ஆனா, என்ன உறுத்தறதுன்னா, ஒரே பாட்ட 4 படங்களில திரும்ப திரும்ப உபயோகப்படுத்தறது தான்.
‘காதல் கொண்டேன்’ படத்தில் வரும் “மனசு ரெண்டும் பார்க்க” பாடலை அப்படியே ‘கண்ட நாள் முதல்’ படத்தில் “மேற்கே மேற்கே மேற்கே தான்” பாடலாக உபயோகப்படுத்திக்கொண்டவர், அதையே ‘சென்னை 600028′ படத்துக்காக “உன் பார்வை மேலே பட்டால்” ஆகியது. அப்புறமா பார்த்தால் இப்பொழுது ‘சத்தம் போடாதே’ படத்துக்கும் அதே பாடலை “காதல் பெரியதா; காமம் பெரியதா”-ன்னு மாறியிருக்கிறது. இரண்டு இரண்டு பாடலா திரும்ப திரும்ப கேட்டுப்பாருங்க. நான் சொல்றது தெரியும். மற்றபடி யுவனின் பெருமைகளை(?) போட ஒரு தனி பதிவே போடலாம்.
இளையராஜா ஒரு முறை சொன்னார். ஒரு பாடலை கேட்கும் பொழுது அது நம் ஆழ்மனதில் பதிந்துவிடும். பின்னாளில் ட்யூன் போடும்பொழுது அது தன்னையும் அறியாமல் அந்த ட்யூன் வந்து செட்டாயிடும். அதனால் காஃபி என்பது தடுக்க முடியாது என்று. சரி தான்! அதுக்காக இப்படியா?
5 comments நவம்பர் 30, 2007
இந்தியா Vs பாகிஸ்தான் – எ 60:60 மேட்ச்
பாகிஸ்தானை பற்றின ஒரு ஜோக் உண்டு.
மன்மோகன் சிங்: அணுயுத்தம் வந்தால் பாகிஸ்தானின் 14 கோடி பேரையும் ஒரு சைக்கிள்காரரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.
புஷ்: யாரந்த சைக்கிள்காரர்?
மன்மோகன் சிங் (தன் செயலரிடம்): பார்த்தீங்களா? நான் சொல்லலை. 14 கோடி பாகிஸ்தானியரை பற்றி யாரும் கவலைபடமாட்டார்கள் என்று?
ஒரே மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு ஆடுகளாய், வெவ்வேறு பாதையில், வெவ்வேறு கொள்கைகளுடனும் செல்ல ஆரம்பித்து இன்று வரை நிற்காது அதே பாதையில் சென்று கொண்டிருக்கின்றன இரு நாடுகளும். பிறக்கும் பொழுதே ஒரு அறுவை சிகிச்சை. அந்த வடு மறைவதற்குள் அடுத்தடுத்து பாகப்பிரிவினையில் சண்டை.
ஒப்பீட்டளவில் பார்த்தால்,இங்கே அங்கே ஜனநாயகம். “இந்திய ஜனநாயகம் சிறப்பாக உள்ளது” – பாக். சுப்ரீம் கோர்ட் பாராட்டு. எல்லை மீறுவது, லஞ்சம். எல்லை மீறுவது பயங்கரவாதம். ராணுவத்துக்கு நிதி ஒதுக்குவது ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். ஜனநாயகத்துக்கு பணம் ஒதுக்குவது ஜனநாயாத்திற்கு சற்றேனும் தொடர்பில்லாத ராணுவ அதிபர்கள். கேள்வி கேட்க பணம் வாங்கினால் அதையும் எதிர்த்து கேள்வி கேட்கலாம். கேள்வி இருந்தால் தானே பணம். எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வலமிருந்து இடமாகத்தான் எழுதவேண்டும். ஜனாதிபதி என்பவர் ரப்பர் ஸ்டாம்ப். ஜனாதிபதி / அதிபரை தவிர அனைவரும் ரப்பர் ஸ்டாம்ப். கோவிலுக்காக உண்டியல் குலுக்கல். தீவிரவாதத்துக்காக உண்டியல் குலுக்கல். ஊழல் அரசியல்வாதிகள் கூட சிறைக்கு செல்வதில்லை. அதிபர்களே தொங்கவிடப்படுவார்கள். குட்டி குட்டி அண்டை நாடுகளும் நம்மிடம் வாலாட்டும். வாலாட்ட பயிற்சி கொடுக்கப்படும். பணவீக்கத்திற்கு ஏற்ப பணம் அச்சடிக்கப்படுகிறது. இந்திய பணம் அச்சடிக்கப்படுகிறது. இந்தியா ஜெயித்தால் இந்திய தேசிய கொடி பட்டொளிவீசி பறக்கும். பாகிஸ்தான் தோற்றால் இந்திய கொடி எரிக்கப்படும். ராணுவம் என்பது நாய்குட்டி போன்றது. ராணுவம் என்பது பூனைக்குட்டி போன்றது. (நாய்க்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியும் அல்லவா?) மூன்றாம் உலக நாட்டிற்கு முதலில் ஓடி உதவி செய்வோம். பூகம்பத்திற்கு இந்தியா உதவினாலும் ஏற்க முடியாத நிலை. வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித் தருவதில் உலக வங்கிக்கு நாம் செல்லப்பிள்ளை. கடன் வாங்கும் சூழ்நிலை எழவில்லை (முன்னேற்றம் பற்றி யோசித்தால் தானே…) பசியை போக்க வெளிநாட்டிலிருந்து கடன். ஆயுதப் பசிக்காக வெளிநாட்டிலிருந்து கடன். அணுகுண்டு சோதனை. அடுத்த 15 நாட்களில் சீன அணுகுண்டு சோதனை. நான் நிஜ துப்பாக்கியை தொட்டு கூட பார்த்ததில்லை. ???
ஒரு தாய் வயிற்றில் இருந்து பிறந்த குட்டிகளிடம் இவ்வளவு முரண்பாடுகள்.
இந்தியா உலக அளவில் கையூட்டு / ஊழல் ஆகியவற்றில் குறிப்பிட்ட இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை. ஏழை பனக்காரன் வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாநிலத்திற்கு மாநிலம் எல்லை பிரச்சினை முதல் வேலை / தண்ணீர் பிரச்சினைகள். தனி நாடு கேட்டு போராடும் வட கிழக்கு மாநிலங்கள். மதக்கலவரங்கள் மறுபுறம். 1947-ல் பிறந்தவர் சீனியர் சிட்டிசன் ஆகியும் இன்னும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கூட கிடைப்பதில்லை. நாட்டை சுற்றிலும் நம்மையே மிரட்டும் குட்டி குட்டி நாடுகள். இத்தனை பிரச்சினைகள் இருந்தும் நாம் பாகிஸ்தானை விட கொஞ்சம் போல் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் நாம் நமக்காக தேர்ந்தெடுத்த பாதை. அது மக்களாட்சி. சீனாவுடன் ஒப்பிட்டால் நம் வளர்ச்சியின் வேகம் சற்று குறைவு தான். இதற்கு காரணம் சீனர் ஒருவர் சொல்வது போல, “எங்கள் ஊரில் அரசியல் உள்ளூர்மயமாகவும் நிர்வாகத்தை தேசிய அளவிலும் வைத்திருப்பதால் தான்”. இந்தியாவிலோ இது தலைகீழ். அதனால் ஒப்பீட்டளவில் வளர்ச்சி சீனாவை விட குறைவு. ஆனால் இந்தியாவை விட பாகிஸ்தானிலோ நிலைமை இன்னும் மோசம். உள்கட்டமைப்பில் இருந்து எல்லாமே மோசம்.
காரணம் அங்கு நிலையான முக்கியமாக மக்களாட்சி ஆட்சி இல்லை. அதை விடவும் மக்களின் முன்னேற்றத்தை கண்டு கொள்ளாத அரசு. அங்கே உணர்ச்சி வேகத்தில் அரசியல் முடிவெடுக்கும் மக்களும் ஒரு காரணம். 1947 முதல் காஷ்மீர் என்ற வார்த்தை எத்துனை முறை உபயோகப்படுத்தப்பட்டிருக்கும், அரசியலுக்காக? பரந்திருந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பிரிந்த ஒரே காரணத்தினால் எந்த செயலையும் நம்மோடு ஒப்பிட்டு பார்த்து ஒப்பிட்டு பார்த்தே வளர்ந்த நாடு. காஷ்மீர் கௌரவ பிரச்சினை ஆனது. இங்கே பட்டாசு வெடித்தால் அங்கே சீன பட்டாசு. இந்தியாவை உணவு உற்பத்தியில் முந்துவதை விட கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதை பற்றியே அதிகம் யோசிக்கும். “இ ஃபார் எனிமி” என்று பக்கத்தில் இந்திய வரைபடத்தை போட்டு சொல்லித்தரும் மதரசாக்கள். “ஐ ஹேட் இந்தியா” ஆர்குட் குழுவிற்கு எண்ணிலடங்கா உறுப்பிணர்கள் சேருவது என்று…
“வன்முறை என்பது இரு பக்கமும் கூர்மையுள்ள ஆயுதம். அது உபயோகப்படுத்துபவரையும் அழித்துவிடும்” – சொன்னவர் அறிஞர் அண்ணா. அவர் அன்றைக்கு சொன்னது இன்றைக்கு யாருக்கு பொருந்துதோ இல்லையோ, தற்போதைய சூழ்நிலையில் நம் அன்னாத்தே பாகிஸ்தானுக்கு பொருந்தும். என்ன தான் இருந்தாலும் நமக்கு ஒரு நாள் மூத்த அன்னாத்தேவாக பிறந்த தேசம் அல்லவா பாகிஸ்தான்? (இரட்டை குழந்தை என்றாலும் இரண்டாவதாக பிறப்பவர் தானே மூத்தவர்?)
பாகிஸ்தான் தன் வளர்ச்சிக்கு முந்துவதை விட இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து பொறுமியதே அதிகம். இந்தியாவை அதன் எதிரியாகவே பார்த்து பழக்கப்பட்ட நாடு. தீவிரவாதத்தை ஊக்குவிப்பது தன் வெளியுரவு கொள்கைகளில் ஒன்று என்பது போல செயல்பட்டது. ஆனால், இன்று அது தொடங்கிய தீவிரவாதம் அந்த தேசத்தின் இறையான்மைக்கே கேடு விளைவிக்கிறது. இது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல. அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும். ஏன்? இந்தியாவிற்கும் சேர்த்து தான். வளர்த்த கடா மார்பில் பாய்வது பழகி போன ஒன்றாகிவிட்டது தீவிரவாதத்துக்கு. முஜாகிதீன்களை வளர்த்த அமெரிக்காவாகட்டும், பின்லாடன் ஆகட்டும், ராஜீவ் மரணமாகட்டும், காஷ்மீர் தீவிரவாதிகளாகட்டும். இன்னும் எண்ணற்ற உதாரணங்கள்.
கொஞ்ச காலம் முன்பு இந்தியாவில் தீவிரவாதம் என்பது ஸ்பான்சர் செய்யப்படும் ஒரு முறையாகவே செயல்படுகிறது. இதற்கு முழு காரணமும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனப்படும் உளவு அமைப்பு. 1965-ல் இந்தியாவுடனான போருக்கு பிந்தைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு 1969-ல் விரிவுபடுத்தப்பட்டது. இதன் முக்கியமான வேலை இந்தியாவில் அதன் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது. இதன் செயல்பாடு பயங்கரமானவை. இது பாகிஸ்தானின் மிகுந்த அதிகாரமிக்க ஒரு அமைப்பு. பாகிஸ்தானில் ஒரு தனி அரசாங்கம் போல செயல்படும். அதாவது, யாருக்கும் கட்டுப்படாது. உள்ளூர் அரசியலுக்காக ஐ.எஸ்.ஐ செய்யும் வேலைகளை கண்டுகொள்ளாமல் இருந்தும் அதை ஊக்குவித்து கொண்டும் இருந்தது பாகிஸ்தான். அதெல்லாம் 9/11 வரை தான். 9/11 உலகின் பல நாடுகளின் வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் பற்றி யோசிக்க வைத்தது. நடுவில் லண்டனில் நடந்த 7/7 வேறு சேர்ந்துக் கொண்டது. ஆனால், இந்த தேசங்களினால் இந்தியாவின் டிசம்பர் 13 கண்டுகொள்ளப்படவேயில்லை என்பது அமெரிக்க வெளியுரவு கொள்கைகளை அறிந்தவர்களுக்கு ஆச்சரியக்கூடிய விஷயம் அல்ல. வாஜ்பேயி பிரதமராக இருந்த பொழுது இதை வைத்து அமெரிக்க செலவில் தீவிரவாதிகளுக்கு வேட்டு வைக்கலாம் என்று முயற்சித்தார். அமெரிக்க, பிரிட்டன் கண்களுக்கு இவையெல்லாம் தெரியவேண்டுமா என்ன?
9/11 முழுமுதற் காரணகர்த்தாவாகிய பின்லாடனை தேடிப்பிடித்து கழுத்தை திருக வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு. பின்லாடன் ஆப்கான் மலைப்பகுதிகளில் ஒளிந்து கொண்டது வசதியாக போய்விட்டது. பின்னை தேடுகிறோம் லாடனை தேடுகிறோம் பேர்வழி என்று டேரா போட்டுக் கொண்டது. திருடனுக்கு அப்பொழுது தான் தேள் கொட்டியது. கத்தவும் முடியவில்லை. தாலிபான் விழுந்ததால் ஆப்கான் இப்பொழுது பாகிஸ்தானுக்கு குடைச்சல் கொடுக்கும் நாடு. ஆப்கானில் ஆண்கள் சவரன் செய்துவிட்டு வேலைக்கு போகிறார்கள். சதாமை அமெரிக்கா ‘கொலை’ செய்த பொழுதும் பேச முடியவில்லை. 9/11-க்கு பாகிஸ்தானும் மறைமுகமாக உதவியிருப்பது அமெரிக்காவுக்கு தெரியாமல் இல்லை. அதனை கண்டு கொள்ளாதது போல இப்பொழுது பாகிஸ்தானுடன் சேர்ந்து பின்லாடனை தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். இதனால் பாகிஸ்தானுக்கு பணம் / நல்ல பிள்ளை பட்டம் கிடைக்கிறது. இவையெல்லாம் சேர்த்து உள்ளே இருக்கும் காஷ்மீரப் ‘போராளிகள்’ கைகள் இப்போதைக்கு கட்டப்பட்டுள்ளன. முஷரஃப்புக்கும் வேறு வழியில்லை. வேண்டும் என்னும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்வதற்கும் பின் வேண்டாம் என்றால் எறிவதற்கும் அவர்கள் என்ன கறிவேப்பில்லையா? Trained professional போராளிகள். காஃபிர்களான அமெரிக்காவையும் இந்தியாவையும் எதிர்ப்பதற்காக மெருகேற்றப்பட்டவர்கள் இன்று பாகிஸ்தான் அரசாங்கம் பக்கம் தம் பார்வையை திரும்பியிருக்கிறார்கள். இப்பொழுது அவர்களின் முதல் எதிரி முஷரஃப்பாகி விட்டார். அதனால் தான் காஷ்மீரில் வெடிக்கவேண்டியதெல்லாம் இன்று பாகிஸ்தானுகுள்ளேயே வெடிக்கிறது.
எப்பொழுது ஒரு போராளிக்குழுக்கள் என்று கருதப்படுபவர்கள் அப்பாவி பொதுமக்களை கொல்ல ஆரம்பிக்கிறார்களோ அப்பொழுதே அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைப்பதில்லை. அவர்களுக்காக ஆரம்பித்து கடைசியில் அவர்களையே கொன்றால்? காலிஸ்தான் இயக்கம் தன் சொந்த மக்களின் ஆதரவை இழந்த பிறகு தான் பலமிழந்தார்கள். அமெரிக்காவை எதிர்க்கிறேன் என்று தன் சொந்த சகோதரர்களையே தினம் தினம் கொல்வது ஈராக்கில் ஆரம்பித்து இன்று பாகிஸ்தான் வரை வளர்ந்திருக்கிறது. இதற்கிடையில் ஈராக்கில் ஷியா – சன்னி சண்டை வேறு. அதுசரி, இந்த சண்டை வரும் என்று தெரிந்து தானே சிறுபாண்மையின சதாமை புஷ் அன்ட் கோ ‘கொலை’ செய்தார்கள். இப்போது பாகிஸ்தான் மக்கள் தீவிரவாதம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வார்கள். அதனால் அவர்களல் இந்திய மக்களுடன் நெருக்கமாக உதவும். இது மேலும் அவர்களை மூர்க்கமாக்கும். அதனால் தங்களிடம் பட்டாசுகள் இருப்பு இருக்கும் வரை வெடித்துக்கொண்டே இருப்பார்கள். கராச்சியில் குண்டு வெடித்து ஆரம்பித்து, இஸ்லாமாபாத் மசூதி சம்பவம், சமீபத்தில் பேனசீர் நாடு திரும்புவது வரை சில்லரை சில்லரையாக மனித உயிர்கள் பலியாகின்றன. பெனசீரை 140 பேர் சொர்கத்திலிருந்து வெல்கம் அட்ரஸ் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு அப்பாவி பொதுமக்கள் இறக்கப்போகிறார்களோ?
ஒருவன் போராளியாக வேண்டும் என்றால் இந்த தேசத்தில் ஒரு தூப்பாக்கியோ வெடிகுண்டோ கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனால் பாகிஸ்தானில் அப்படி கிடைப்பது ஒன்றும் கஷ்டம் இல்லையே? இன்று அங்கே சதாரண சிவிலியன்கள் கைகளில் துப்பாக்கி கிடைப்பது இந்திய பணம் அச்சடிப்பது மாதிரி அவ்வளவு சுலபம். அப்பொழுது அரசாங்கம் கண்டுகொள்ளாமல் விட்டது. இன்று அந்த துப்பாக்கிகளை இப்பொழுது அவர்களுக்கெதிராகவே உபயோகிக்கிறார்கள்.
சூழ்நிலை இப்பொழுது முஷரஃப்பை தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டியதாக போய்விட்டது. இது தற்போதைக்கு இந்தியாவுக்கு சாதகம் என்பதில் சந்தேகம் வேண்டாம். இதில் முக்கியமான விஷயம் பாகிஸ்தான் வசம் இருக்கும் அணு ஆயுதங்கள். இது பாகிஸ்தான் அரசாங்கத்திடம் (முஷரஃப்பிடம்) இருப்பது நமக்கு சேஃப். ஆயுதமோ அல்லது ஆயுதம் தயாரிக்கும் வழிமுறைகளோ கொஞ்சம் கசிந்தாலும் அதை காட்ச் பிடிப்பதற்கென்றே காத்திருக்கிறார்கள் பின்லாடனும் அல்-ஜவாஹிரியும். இந்த கசிவுகள் பாகிஸ்தனின் அணுத்தந்தை வழியாககே போயிருக்கவேண்டியது. கொஞ்சம் யோசித்து பாருங்கள். இவற்றில் கொஞ்சம் பின்லாடன் குரூப்புக்கு போனால் என்ன நடக்கும்? முதலில் சொன்ன ஜோக் தான் நடக்கும்…
4 comments அக்டோபர் 29, 2007
மின்னஞ்சலில் காணாமல் போன தோழி
யாஹூவின் அரட்டை அரங்கத்திற்கு (Chat world) பொதுவாக நுழையமாட்டேன். அன்று ஏனோ அலுவலில் வேலை இல்லையன்பதாலும், பொழுதுபோகவில்லையென்பதாலும், சரி போகலாம் என்று நுழைந்தேன். அதனை தவிர்ப்பதற்கு காரணம், அரட்டைக்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால். ஒருவர் வந்து பேச்சு கொடுத்தார். ஏ.எஸ்.எல் எல்லாம் கேட்ட பிறகு சும்மா கொஞ்ச நேரம் பேசினோம். பெண் என்று தெரிந்தது. பெண் என்று சொல்லியும் பலர் வருவார்கள். பெயர் பிரியா என்றும், சென்னை அடையாறை சேர்ந்தவள் என்றும் கூறினாள். திருமணமாகி சில மாதங்களே ஆகி தற்போது (அப்பொழுது) ஆஸ்திரேலியாவில் இல்லத்தரசியாக இருப்பதாகவும் கூறினாள். அவள் தம்பியும் ஆஸ்திரேலியாவில் தான் படித்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அவன் தனியாக அவன் நண்பனுடன் தங்கியிருப்பதாகவும், எப்பொழுதாவது வந்து பார்ப்பான் என்றும் கூறினாள்.
அந்த நாட்களில், 2004-ல், நான் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். தினமும் இந்திய நேரம் 11 மணியளவில் அரட்டைக்கு வந்துவிடுவாள். 2-3 மணிநேரம் நீளும். இரண்டொரு நாளிலேயே அன்யோன்யமாகி விட்டாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திடீரென்று தன் குடும்ப கஷ்டங்களையெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டாள். தினமும் தன் வீட்டில் நடப்பனவற்றை என்னிடம் ஒப்புவிக்க ஆரம்பித்து விட்டாள். தன் ஹோம் சிக், எந்த அளவு தன் பிறந்த வீட்டை மிஸ் செய்கிறாள் என்று அரட்டை நீளும். சென்னைக்கு வந்தால் வீட்டிற்கு வருமாறு கூறினாள். தனக்கும் தன் கணவருக்கும் இடையில் நடக்கும் சிறு சிறு சண்டைகள், பின் சமாதானம், தனிமையில் அவளுக்கிருக்கும் கஷ்டம், அங்கிருக்கும் இந்திய கணவர்கள் எவ்வாறு இந்தியாவில் இருக்கும் தன் மனைவிமார்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள், வீட்டு வேலை அவளை பாடாய் படுத்துவது என்றெல்லாம் புலம்புவாள். அவளின் சங்கடங்களை நினைத்து 2005-ல் நான் எழுதிய பதிவு இது. எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த ஒரே தொடர்பு யாஹூ மின்னஞ்சல் முகவரி மட்டுமே. அதனை தவிர்த்து வேறெதுவும் கிடையாது.
சில நாட்கள் கழித்து அவள் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவத்துக்கு ஓரிரு வாரத்தில் சென்னை செல்வதாகவும் கூறினாள். அந்த இரு வாரமும் ஊருக்கு போகப்போவதில் அவளுக்கு நிறைய சந்தோஷங்கள். சென்னையில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற கனவுகள் வேறு. ஊருக்கு செல்வதற்கான ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தாள். பின் ஊருக்கு செல்வதில் இருந்த இழுபறியும் அவளை பாதிக்கவே செய்தது. ஒருவழியாக எல்லா இழபறியும் கழிந்து ஊருக்கு செல்லும் நாளும் வந்தது. சென்னைக்கு கிளம்பும் அன்றும் தன் கணவனுடன் ஏதோ மனஸ்தாபம், பின் வழக்கம் போல சமாதானம்.
சென்னைக்கு வந்ததும் மின்னஞ்சல் அனுப்புமாறு பேசிவைத்துக்கொண்டோம். அது தான் நான் அவளிடம் பேசிய (சாட்டிய) கடைசி நாள். சென்னைக்கு வந்தவள் பின் எந்த மின்னஞ்சலும் அவளுடமிருந்து வரவில்லை. சரி! பிஸி போல என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதன் பின்னும் அவளிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. நானும் சில நாட்கள் கழித்து மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால், மவுனமே பதிலானது. பிரச்சினை என்னவென்றால் அவள் என்ன ஆனாள் என்பதுதான். மின்னஞ்சல் முகவரி தவிர்த்து வேறெதுவும் என்னிடம் கிடையாது. நானும் நினைவுக்கு வரும் போதெல்லாம் மின்னஞ்சல் அனுப்புவேன். அவள் மின்னஞ்சல் முகவரியும் / கடவுச்சொல்லும் அவளுக்கு மட்டுமே தெரியுமாதலால் வேறொருவரும் எனக்கு பதில் சொல்ல முடியாது. ஒருவாறு பயம் மட்டுமே மிஞ்சும்…
11 comments ஜூலை 11, 2007
தொட்டால் பூ மலரும் – நியூரான் மற்றும் சைக்கான்
இது என்னை அறியாமல் ஒரு தொடர் போல இருக்கும் போல் தெரிகிறது. காரணம் நான் எழுத நினைத்தது ஆவிகளை பற்றி. ஆனால் அதற்கு முதலில் சைக்கான் பற்றியும், டெலிபதி பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சைக்கான் பற்றி தெரிந்துகொள்ள நியூரானை பற்றி தெரிந்திருந்தால் சற்று சுலபமாக இருக்கும் என்பதால், முதலில் நியூரான்கள்.
நியூரான்கள், ஆங்கிலத்தில் Neuron, என்பவை செல்கள். வெறும் செல்கள் அல்ல. மின்சார சக்தி நரம்பு வழியாக ஊடுருவ உதவும் செல்கள். மின்சார சக்தி எதற்கு நரம்பு வழியாக ஊடுருவ வேண்டும்? அதன் பயன்கள் என்ன? ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘உணர்ச்சி’. உங்கள் கை உங்களை அறியாமல் நெருப்பை தொடும்பொழுது மூளைக்கு ‘இது நெருப்பு; கையை எடு’ என்று உங்கள் மூளைக்கு ‘உணர்த்து’வது இந்த நியூரான்கள் தாம். அந்த கனத்தில் உங்கள் மூளை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மூளை அந்த கனத்தில் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு உங்கள் கையை அனிச்சை செயலாக நெருப்பில் இருந்து எடுக்க வைக்கிறது. உணர்ச்சிகளின் மையமே இந்த நியூரான்கள் தாம். முதுகெலும்புள்ள உயிர்கள் (Vertebrates) அனைத்திற்கும் உள்ள நரம்புகள், மூளை, முதுகெலும்புகள் ஆகியவற்றில் பிரதான பங்களிப்பு செய்வது இந்த நியூரான்களே.
ஒவ்வொரு நியூரான்களும் ஒவ்வொரு கணினி ப்ரோக்ராம் போல. அவைகளின் வேலை,
1) மற்ற நியூரான்களிடமிருந்து தகவல்களை பெருவது (INPUT)
2) அந்த தகவல்களை செயலாற்றுவது (PROCESS)
3) பின் அவற்றை மற்ற நியூரான்களுக்கு அனுப்புகிறது (OUTPUT)
INPUT –> PROCESS –> OUTPUT
நம் உடலின் இயக்கம் (நடை, ஓட்டம்), ஐம்புலன்கள் (பார்வை, கேட்கும் திறன், சுவை, தொடுதல்), முடிவெடுப்பது, யோசிப்பது, கனவு காண்பது, திட்டமிடுதல் போன்ற செயல்கள் மற்றும் எல்லா மூளையை உபயோகிக்கும் செயல்கள் யாவற்றிற்கும் பல வகையான நியூரான்கள் தேவைப்படுகின்றன. இதன் மொத்த வகைகள் பத்தாயிரத்திற்கும் மேல். இந்த மேற்கூறிய செயல்கள் செய்ய சுமாராக எத்தனை நியூரான்கள் தேவைப்படும்? சாதாரண மனித மூளையில் (மட்டும்) இருக்கும் மொத்த நியூரான்களின் எண்ணிக்கை இருபதாயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒவ்வொரு நியூரானும் ஐந்தாயிரம் முதல் இரண்டு இலட்ச மற்ற நியூரான்களுடன் இணைந்திருக்கிறது. இந்த நியூரான்கள் வழியாக தகவல் பரிமாற்றம் செய்யபடுவதற்கான வழிகள் மட்டுமே, இந்த பிரபஞ்சத்தில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகம்! அப்படியானால் இந்த நியூரான் நெட்வொர்க் எப்படி பட்டது என்று சற்றே சிந்தித்து பாருங்கள்!! நியூரான்களின் எண்ணிக்கையே நம்மை மலைக்க வைக்கிறது என்றால், அந்த நியூரான்களுக்கு உதவி செய்யும் லியா (Glia) செல்களின் எண்ணிக்கை மட்டும் நியூரான்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகம்!!! இவை நியூரான்கள் கட்டுக்கோப்பாக இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், மூளையில் செல்கள் இறந்தவுடன் அவற்றை அப்புறப்படுத்தவும் செய்கிறது.
மறுபுறம், மிகக் குறைவாக ஒட்டுன்னி வகையை சேர்ந்த புழுக்களுக்கு 302 நியூரான்கள் மட்டுமே. அதனால் விஞ்ஞானிகள் இந்த ஒட்டுன்னிகளை வைத்து மற்ற உயிரிணங்களுக்குண்டான நியூரான்களின் வரைபடத்தை வரைகின்றனர்.
(பெரிதாக காண, படத்தை கிளிக்குங்கள்)
மூளையையும், முதுகு தண்டுவடத்தையும் இணைத்தால் வரும் பகுதி தான் மத்திய நரம்பு மண்டலம். ஆங்கிலத்தில் Central Nervous System (CNS). இது தான் சைவத்திற்கும், அசைவத்திற்கும் வேறுபடுத்துகின்றது.
| வெஜிடேரியனிசம் பதிவில் இருந்து |
| இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிணத்திற்கும் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) உள்ளது. இந்த மண்டலம் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வலி என்றால் என்ன என்று இந்த மண்டலம் தான் ஒவ்வொரு உயிர்க்கும் உணர்த்துகின்றது. ஆடு, மாடு, கோழி, முயல், காடை, பாம்பு, ஏன் மனிதனுக்கும் மற்றும் நம் சாப்பிடும் அனைத்து உயிரினத்திற்கும் இந்த மத்திய நரம்பு மண்டலம் உள்ளது. அதனால் தான் இந்த உயிர்களை வதைக்கும் பொழுதும், கொல்லும் பொழுதும் வலி வந்து இந்த உயிர்கள் துடிக்கின்றது. சரி! நாம் சாப்பிடும் சைவ உணவு வகைகளான அரிசி, பருப்பு, பால், தாவரங்கள், ஏன் தண்ணீர் போன்றவையும் உயிருள்ளவைதானே என்ற கேள்வி எழலாம். அப்பொழுது இந்த உணவு வகைகளும் அசைவம் தானே ஆகின்றது? இல்லை! காரணம் இந்த உயிர்களுக்கு மேலே சொல்லப்பட்ட மத்திய நரம்பு மண்டலம் என்பது இல்லை. அதனால் அவற்றிற்கு வலி தெரியாது. இதுவும் ஒரு அசைவம் தான். ஆனால் நாம் இயற்கைக்கு உட்பட்டு, நமக்கு தரப்பட்டுள்ள எல்லை வரை செல்லலாம். |
சரி! விஷயத்திற்கு வருவோம். நமக்கு நியூரான்கள் மூன்று சுவைகளில்(!) கிடைக்கிறது.
1) உடல் இயக்க செயல்பாடுகள் பற்றின தகவல் பரிமாற்றதிற்கு (Motor நியூரான்கள்).
2) ஐம்புலன்கள் சம்பந்தப்பட்டவை (Sensory நியூரான்கள்).
3) தங்களுக்குள் தகவல் பரிமாற்றதிற்கு (Inter நியூரான்கள்).
நியூரானின் தோற்றம்
(பெரிதாக காண, படத்தை கிளிக்குங்கள்)
ஒவ்வொரு நியூரானும் நான்கு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி சோமா (Soma). இது தான் நியூரான்களின் மையப்பகுதி. இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகள், முன்பே சொன்ன, செயல்பாடு. அதாவது வேலையை கச்சிதமாக முடிக்க பயன்படுவது. இவை அதன் சோமாவில் இருந்து வெளிப்புறமாக இருக்கும், நம் கைகள் அல்லது காதுகளை போல. தகவல் உள்ளே வருவது டென்ட்ரைட் (dendrite). தகவல் வெளியேறுவது ஆக்ஸான் (axon) என்னும் மறுவழியில். ஒரு நியூரானுக்கு ஆயிரம் டென்ட்ரைட் இருக்கலாம், ஆனால் ஒரே ஒரு ஆக்ஸான் மட்டுமே இருக்கும். நான்காவது பகுதி ஆக்ஸான்-ன் முனையில் இருக்கும் ஆக்ஸான் டெர்மினல்ஸ் (axon terminals). இந்த முனைகள் முக்கியமானவை. இவைகள் ஒரு தனி ராஜாங்கமே அமைக்கும் செல்கள். இவைகள் தங்களுக்குள் இருக்கும் இடைவெளிகளின் மூலம் தங்களுக்கு இடையில் தொலை தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த இடைவெளிகளுக்கு சினாப்ஸ் (Synapse) என்றும், இந்த செயலுக்கு நியூரான் டாக்டரைன் என்றும் பெயர்.
தகவல் பரிமாற்றம் எப்படி நடைபெருகிறது?

(பெரிதாக காண, படத்தை கிளிக்குங்கள்)
நியூரான்களின் தகவல் பரிமாற்றம், மேலே சொன்ன, சினாப்ஸின் ஊடே வேதியியல் / மின்சார சமிக்சையின் ஓட்டத்தால் நடைபெறுகிறது. இங்கே நியூரான்களின் வேலை சமிக்சையை உள்வாங்கி (INPUT), அதனை பரிமாற்றம் செய்து (PROCESS), பின் அந்த தகவலை வெளிப்படுத்துகிறது (OUTPUT). இது எந்த வகை நியூரான்களுக்கும் பொருந்தும், இரண்டு சூழ்நிலைகளை தவிற. 1) முதல் சுவை நியூரானகளான மோட்டர் நியூரான்களின் வெளிப்பாடு தசைகளுக்கு செல்வதால் இந்த சூழ்நிலையிலும் தகவல் இன்னொரு நியூரானுக்கு செல்லாது. 2) மற்றும் இரண்டாம் சுவை நியூரான்களின் ஐம்புலன்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சி என்பது ஒரு வெளிப்புற தூண்டுதல் தேவைப்படுகிறது (Enternal physical stimulus). அதனால், அது மட்டும் மற்றவை போல சினாப்ஸ் மூலமாக பெறப்படுவது அல்ல.
மூன்றாவது சுவை நியூரான்களான இன்டர் நியூரான்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்வதால் அதன் தகவல் உள்ளே வருவதும் நியூரான்கள் மூலம், வெளியே செல்வதும் நியூரான்கள் மூலம். அதனால், இந்த நியூரான் மற்ற நியூரான்களுடன் கட்டாயம் இணைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தகவல் பரிமாற்றம் நிகழாது. மேளேயுள்ள படத்தை பாருங்கள். இதில் தகவலானது மஞ்சள் நிற நியூரான் A-வில் இருந்து நீல நிற நியூரான் B-க்கு சென்று பின் பிங்க் நிற C-க்கு செல்கிறது.
டென்ட்ரைட் மற்றும் ஆக்ஸான்கள் நீயூரான்களின் பகுதிகள். ஆனால் சினாப்ஸ் நியூரான்களின் பகுதி அல்ல. சினாப்ஸ் தான் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கியமான பகுதி. சினாப்ஸ் இல்லாமல் தகவல் பரிமாற்றம் நிகழாது. நினைவில் கொள்க, ஒரு நியூரானுக்கு ஒரே ஒரு சினாப்ஸ் மூலமாக மட்டும் தகவல் வராது. மாறாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினாப்ஸ்களிடமிருந்து தகவல்கள் வந்து சேரும். மற்றும் தகவல் சினாப்ஸ் மூலமாக உள்ளே வருவது எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம், டென்ட்ரைட் மூலமாக மட்டும் அல்ல.
படத்தின் மூலம் ஏற்படும் கேள்விகள்.
1) உள்ளே வரும் தகவலின் இயல்பு என்ன?
2) சோமா எப்படி அந்த தகவலை செயல்படுத்துகிறது?
3) வெளியே செல்லும் தகவலின் இயல்பு என்ன? எப்படி இருக்கும்?
இந்த கேள்விகளுக்கு பதில் சினப்ஸில் நடப்பது தான் நியூரானில் எதிரொலிக்கும். நியூரானில் நடப்பது தான் சினப்ஸில் எதிரொலிக்கும். ஆக ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. நியூரான்கள் தகவலை உள்வாங்கியவுடன் அது செய்யும் செயல் ஆக்க்ஷன் பொட்டென்ஷியல்கள் (Action potentials) எனப்படும் சிறு சிறு மின்சார சமிக்சைகளை, அயான்களை (ions), உருவாக்கும். இவை ஆக்ஸானின் மையப்பகுதியில் இருந்து உருவாகிறது. இது எதற்கு? நியூரானில் உள்ள புரத தோலானது மின்சார சமிக்சைகளான தடுக்கும் அரணாக உள்ளது. நியூரானின் உள்ளே இருக்கும் அயான்களின் நிறை மாறும்பொழுது, அந்த புரத தோல் மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு மாறும்பொழுது அது தன் பழைய நிலைக்கு திரும்ப முடிவதில்லை. அந்த நிலையில் பெரிய அளவில் மின்சார சமிக்சை உருவாகிறது. இது தான் ஆக்க்ஷன் பொட்டென்ஷியல். இந்த சமிக்சை ஆக்ஸான் வழியாக போய் சேர்ந்து ஆக்ஸான் டெர்மினல்ஸை அடைகிறது. அவ்வாறு ஆக்ஸான் டெர்மினலை அடையும் பொழுது அது நியூரானிலிருந்து வெளியே செல்லும் தகவலாக, சிறு மிண்சார அதிர்வாக, செல்கிறது (OUTPUT). இந்த வெளிப்பாடு மற்ற அருகில் இருக்கும் நியூரானுக்கு INPUT-ஆக அமைகிறது.

(பெரிதாக காண, படத்தை கிளிக்குங்கள்)
அடுத்து, சைக்கான்கள் பற்றி பின்வரும் பகுதிகளில் பார்ப்போம்.
நியூரானின் அமைப்பை பற்றின மற்ற படங்கள் கீழே:
6 comments ஜூன் 6, 2007
இப்படி கூட திருடலாமோ?
எங்க ஊரு நகை கடை பஜாருல வித்தியாசமான திருட்டெல்லாம் நடக்கும்.
ஒரு நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை (ஏன்னா? சனி, ஞாயிறு கோர்ட் லீவு), ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் போல, ஒரு போலீஸ் ஒரு திருடனை கூட்டி வருவார். போலீஸ் பெரும்பாலும் ‘கார்டன் சிட்டி’ பெங்களூருவில் இருந்து வருவார்கள். திருடனும் திருடனும் (அதாங்க அவர் கூட வந்த போலீஸ்) அகஸ்மாத்தா ஒரு நகை கடையை தேர்ந்தெடுப்பார்கள். பின் அந்த போலீஸ் அந்த கடையில் வந்து உட்கார்ந்து கொள்வார். போலீஸ் ஆரம்பிப்பார்.
“நீங்க இந்த திருடன் கிட்ட இருந்து 100 பவுன் திருட்டு நகையை வாங்கியிருக்கீங்க. இது சட்டப்படி குற்றம்(!)”-ன்னு ஆரம்பிப்பார். 100 பவுன் என்பது ஒரு சிறிய நகை கடைக்கு. ‘சிறிய’ என்றால் அந்த கடையில் கல்லா பெட்டி மட்டுமே இருக்கும். கொஞ்சம் போல Jewellery shop மாதிரி அலங்கரித்திருந்தால், கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும். இது அடிக்கடி நடப்பதால், பஜாரில் சோம்பலோடு தான் பரவும், ‘ஹூம்! ஆரம்பிச்சுட்டாய்ங்களா?”-ன்னு. “அண்ணே இன்னைக்கு நம்ம ****** கடையில வெச்சுட்டாங்க”-ன்னு சொல்லி அந்த கடையில ஒரு மினி பொதுக்கூட்டம் நடக்கும். கூட்டம் இந்த கடைக்காரருக்கு உதவ. ஏன்னா! பின்னால இவங்களுக்கும் உபயோகமா இருக்கும் இல்ல? மனித குலம் is a social animal தானே!!!
நெத்தியடி படத்துல சாவு வீட்டுல ஒரு பெரிசு திண்ணையில உக்காந்து சரக்குக்கு காசு கரக்க ஆரம்பிக்குமே, அதுபோல, “சரி! நடந்தது நடந்து போச்சு(!!!!!). இதை நான் அப்படியே மூடி மறைச்சுடறேன். ஒக்காந்து பேசலாமா?”-ன்னு ஆரம்பிப்பார். இல்லை நாங்க சட்டப்படி பார்த்துப்பேன்னா என்ன நடக்கும்? அந்த கடைக்காரரை விசாரணைக்கு அழைத்து போவார் போலீஸ்காரர். எங்கே? பெங்களூருக்கோ அல்லது கர்நாடக எல்லை போலீஸ் சரகத்துக்கு எங்கேயாவது கூட்டி போவார். ‘எப்படியும்’ திரும்புவோம், அல்லது திரும்பாமலும் போகலாம். (சேட்டு) ஒருத்தர் இப்படி போய், பயங்கர உள் காயங்களோட திரும்பி வந்து கடைசியில் செட்டில் தான் செய்தார்.
(இதுல இன்னொரு கூத்து. இப்படி தெரியாம திருட்டு நகை வாங்கி ஜெயிலுக்கு போன ஒரு பாய், ஜெயிலுக்கு போய் வந்து ஒரு கடை ஆரம்பித்தார். ஜெயிலில் ஒரு திருடன் அறிமுகம் போல. ஒரு நாள் இவர் கடையை க்ராஸ் செய்த அந்த திருடன் சும்மா “வணக்கம் பாய்”-ன்னு ஒரு சலாம் போட்டுட்டு போக, அடுத்த நாள் போலீஸ் இவர் கடைக்கு வந்துடுச்சு “இவன் எதுக்கு உனக்கு வணக்கம் வெச்சான்?”. அது ஒரு தனி கூத்து…)
மேலும், இவர்கள் வைத்திருப்பது கருப்பு பணம். அதுவும் இவர்கள் பயப்படுவதற்கு ஒரு காரணம்.
ஸோ, இப்பொழுது கடைக்காரர் தன் மற்ற கடைக்கார சகாக்களோடு ‘உக்காந்து யோசிச்சு’ இந்த சிக்கலான பிரச்சினைக்கு டீல் பேசுவார். கடைசியில் எல்லோரும் சேர்ந்து (திருடன் 1 + திருடன் 2 + கடைக்காரர்கள்), டார்கெட்டட் கடைக்காரருக்கு மொட்டை அடித்து, 50-75 பவுன் வரை, பைசல் செய்து திருடன் 1 + திருடன் 2 ஆகியோரை பாசத்தோடு வழியனுப்பி வைத்து, அடுத்த சான்ஸுக்கு காத்திருப்பார்கள்…16 வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி…
8 comments மே 10, 2007





